சிங்கப்பூர் ஓட்டப் பந்தய வீராங்கனை சாந்தி பெரேரா ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் 200 மீட்டர் பிரிவு ஓட்டப் பந்தயத்தின் இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளார்.
உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை (ஜூலை 30) நடந்த அரையிறுதிச் சுற்றில் அவர் 22.81 நொடியில் மூன்றாவதாக முடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். காமன்வெல்த் விளையாட்டுகளின் வரலாற்றில் தனிநபர் பிரிவு ஒன்றில் இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்ற முதல் சிங்கப்பூர் குறுந்தொலைவு ஓட்டப் பந்தய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
அதே போட்டியில், பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகளின் அடேஜா ஹாட்ஜ் 22.01 நொடிகளில் முதலாவதாகவும், ஜமைக்காவின் அஷாந்தி மூர் முந்தி, 22.49 நொடிகளில் முடித்து இரண்டாவதாகவும் வந்தனர்.
மூன்றாவது அரையிறுதிப் போட்டியில், டிரினிடாட் டொபாகோவைச் சேர்ந்த ஷானிகுவா பாஸ்கோம்ப், 22.31 நொடியில் பந்தயத்தை முடித்து, ஒட்டுமொத்தமாக இரண்டாவது சிறந்த நேரத்தைப் பதிவுசெய்தார்.
மூன்று அரையிறுதிப் போட்டிகள் ஒவ்வொன்றிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தவர்களும், ஒட்டுமொத்தமாக அடுத்த இரண்டு வேகமான வீராங்கனைகளும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றனர். இறுதிப் பந்தயம் ஜூலை 31ஆம் தேதி (சிங்கப்பூர் நேரப்படி ஆகஸ்ட் 1 காலை 4.46 மணி) நடைபெறும்.
இந்தப் பருவத்தில் தமது சிறந்த நேரத்தைப் பதிவுசெய்தது குறித்துக் கருத்துரைத்த சாந்தி, “23 நொடிகளுக்குள் பந்தயத்தை முடித்ததை நினைத்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இதை அடைவதற்காக நீண்ட காலமாகப் போராடி வந்தேன். இது என்னை ஒரு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளது,” என்றார்.


