பெலேவை விஞ்சிய நெய்மார்

பெலேவை விஞ்சிய நெய்மார்

1 mins read
8a2eb330-6256-4ba8-8503-64b5b9005f19
பொலிவியாவிற்கு எதிரான உலகக் கிண்ணக் காற்பந்துத் தகுதிச் சுற்று ஆட்டத்தில் கோலடித்த மகிழ்ச்சியில் பிரேசிலின் நெய்மார். - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

பெலேம் (பிரேசில்): பிரேசில் காற்பந்து அணிக்காக அதிக கோல் அடித்தவர் என்ற பெலேவின் சாதனையை முறியடித்தார் நெய்மார்.

பொலிவியா அணிக்கெதிரான 2026 உலகக் கிண்ணத் தகுதிச் சுற்று ஆட்டத்தில் நெய்மார் இந்தப் பெருமையைப் பெற்றார்.

அந்த ஆட்டத்தில் 5-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் வெற்றிபெற்றது.

அண்மையில் சவூதி அரேபியாவின் அல் ஹிலால் குழுவுடன் இணைந்த 31 வயது நெய்மார், ஆட்டத்தின் முற்பாதியில் பெனால்டி வாய்ப்பைக் கோலாக்கத் தவறினார். ஆயினும், பிற்பாதியின் 61ஆவது, 93ஆவது நிமிடங்களில் அவர் இரண்டு கோல்களைப் போட்டார்.

இதன்மூலம், பிரேசிலுக்காக 125 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் போட்ட கோல்களின் எண்ணிக்கை 79ஆக உயர்ந்தது.

“கோல்களின் அரசனை விஞ்சியதற்காக நெய்மாருக்கு வாழ்த்துகள். உறுதியாக பெலே உங்களை இன்று பாராட்டுகிறார்,” என்று பெலேவின் டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் தமது 82ஆவது வயதில் காலமான பெலே, பிரேசிலுக்காக 92 போட்டிகளில் விளையாடி 77 கோல்களை அடித்தார்.

பொலிவியாவிற்கு எதிரான வெற்றி, பிரேசிலின் புதிய பயிற்றுநர் ஃபெர்னாண்டினோ டினிசுக்கு நல்ல தொடக்கமாக அமைந்தது.

ரியால் மட்ரிட் குழுவிற்காக விளையாடிவரும் ரோட்ரிகோ இரண்டு கோல்களையும் பார்சிலோனா குழுவிற்காக விளையாடிவரும் ஹஃபின்யா ஒரு கோலையும் போட்டனர்.

அடுத்ததாக, வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள ஆட்டத்தில் பிரேசில், பெருவை எதிர்த்து ஆடவிருக்கிறது.

குறிப்புச் சொற்கள்
காற்பந்துஉலகக் கிண்ணம்பிரேசில்பெலேநெய்மார்