உலகக் கிண்ண கிரிக்கெட்: இந்திய அணியில் அஸ்வின்

உலகக் கிண்ண கிரிக்கெட்: இந்திய அணியில் அஸ்வின்

2 mins read
aa51a3fe-1acb-458d-93e4-726a28aa6975
அண்மையில் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடி, நான்கு விக்கெட்டுகளைச் சாய்த்திருந்தார் அஸ்வின். - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

புதுடெல்லி: உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்.

அடுத்த மாதம் 5ஆம் தேதி இந்தியாவில் உலகக் கிண்ணப் போட்டிகள் தொடங்கவுள்ளன.

இந்நிலையில், முதலில் அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் இடம்பெற்றிருந்த அக்சர் பட்டேல், தொடைக் காயத்திலிருந்து முழுமையாகக் குணமடைய இன்னும் மூன்று வாரங்கள் ஆகலாம் எனச் சொல்லப்படுகிறது. இதனால், அவரால் உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவருக்குப் பதிலாக அனுபவமிக்கவரும் மூத்த வீரருமான 37 வயது அஸ்வின் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அண்மையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்த எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அஸ்வின் இடம்பெற்றிருந்தார். முதலிரு போட்டிகளில் விளையாடிய அவர் மொத்தம் நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இந்திய அணிக்காக அவர் ஒருநாள் போட்டிகளில் விளையாடியது இதுவே முதன்முறை.

சென்ற 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ணம் வென்ற இந்திய அணியில் அஸ்வின் இடம்பெற்றிருந்தார். 2015ஆம் ஆண்டு நடந்த போட்டிகளிலும் விளையாடிய அவர், 2019ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை.

இதனிடையே, மூன்றாவது போட்டியில் விளையாடிய இன்னொரு தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர், சீனாவில் நடந்துவரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்குகொள்ளும் இந்திய கிரிக்கெட் அணியுடன் இணையக்கூடும் என்றம் தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணி விவரம்: ரோகித் சர்மா (அணித்தலைவர்), ஷுப்மன் கில், விராத் கோஹ்லி, ஷ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல் (விக்கெட் காப்பாளர்), இஷான் கிஷன் (விக்கெட் காப்பாளர்), சூர்யகுமார் யாதவ், ஹார்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ரவிச்சந்திரன் அஸ்வின், ஷார்துல் தாக்குர், ஜஸ்பிரீத் பும்ரா, முகம்மது ஷமி, முகம்மது சிராஜ்.

குறிப்புச் சொற்கள்