இரண்டில் ஒன்று பார்க்கக் களமிறங்கும் ஆர்சனல், ஸ்பர்ஸ்

இரண்டில் ஒன்று பார்க்கக் களமிறங்கும் ஆர்சனல், ஸ்பர்ஸ்

3 mins read
ca088b3b-a90c-4a52-a703-a13772e72997
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ஆர்சனலின் எமிரேட்ஸ் விளையாட்டரங்கில் ஆர்சனலும் ஸ்பர்ஸ் குழுவும் மோதின. அந்த ஆட்டத்தில் 4-1 எனும் கோல் கணக்கில் ஆர்சனல் வெற்றி பெற்றது. - படம்: ஏஎஃப்பி

இங்கிலிஷ் பிரீமியர் லீக் காற்பந்துப் போட்டியைக் கைப்பற்றும் முனைப்பில் இருக்கும் ஆர்சனல் குழு, சிங்கப்பூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை பின்னிரவு 12.30 மணிக்கு, அதாவது திங்கட்கிழமை (பிப்ரவரி 23) டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் (ஸ்பர்ஸ்) குழுவுடன் மோதுகிறது.

லீக் பட்டியலில் ஆர்சனல் 58 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. ஸ்பர்ஸ் குழு, 29 புள்ளிகள் பெற்று 16வது இடத்தில் உள்ளது.

2004ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாகப் பட்டம் வெல்லும் ஆர்சனலின் கனவுக்கு, கடந்த புதன்கிழமை ஊல்வ்ஸ் அணிக்கு எதிரான 2-2 என்ற சமநிலை முடிவு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை, சிங்கப்பூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 22) அதிகாலை 4 மணிக்கு மான்செஸ்டர் சிட்டி, நியூகாசல் யுனைடெட்டைத் தோற்கடித்தால், ஆர்சனலைவிட இரண்டு புள்ளிகள் மட்டுமே பின்தங்கியிருக்கும் நிலை உருவாகும்.

ஸ்பர்ஸ் குழுவுக்கும் இது மிக முக்கியமான ஆட்டமாகும். தாமஸ் ஃபிராங்கிற்குப் பதிலாகப் பொறுப்பேற்றுள்ள புதிய இடைக்கால நிர்வாகி இகோர் டியூடோர் முதல்முறையாகக் குழுவை வழிநடத்துகிறார். இதனால் விளையாட்டரங்கம் அதிரும் வகையில் ரசிகர்கள் திரண்டு வந்து, தங்கள் பரம வைரியான ஆர்சனலுக்குப் பின்னடைவை ஏற்படுத்த முயல்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்சனலின் நட்சத்திர வீரர் புகாயோ சாகா, லண்டனை மையமாகக் கொண்ட குழுக்களுக்கு இடையிலான ஆட்டங்களில் அனுபவம் வாய்ந்தவர். ஆர்சனலின் எதிரணிக்கு எதிராக அவர் ஒரு சிறந்த சாதனையையும் படைத்துள்ளார்.

கடந்த ஒன்பது ஆட்டங்களில் எட்டு கோல்களுக்கு அவர் பங்களித்துள்ளார். அண்மைய போட்டிகளில் அவர் சீருடை எண் 10 அணிந்து, முக்கியத் தாக்குதல் ஆட்டக்காரர் எனும் புதிய பொறுப்பில் விளையாடி ஊல்வ்ஸ் அணிக்கு எதிராக முதல் கோலை அடித்தார். எனினும், ஸ்பர்சுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் மீண்டும் வலது பக்கவாட்டு நிலையில் ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆட்டங்களில் ஏற்பட்ட காயத்திலிருந்து மீண்டு, தமது புதிய ஒப்பந்தத்தைக் கொண்டாடும் வகையில் இந்த ஆட்டத்திலும் அவர் கோல் அடிப்பார் என்று கணிக்கப்படுகிறது.

மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு எதிரான போட்டியில் சிவப்பு அட்டை பெற்றதால் ஸ்பர்சின் நட்சத்திர ஆட்டக்காரர் கிறிஸ்டியன் ரொமேரோ ஆர்சனலுக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்க முடியாது.

தொடர்புடைய செய்திகள்

இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை, தடுமாறிக்கொண்டிருந்த தனது எதிரணியை அர்சனல் மிக எளிதாக வீழ்த்திவிடும் என்றே பரவலாகப் பேசப்பட்டது. ஆனால், இரு அணிகளிலும் அண்மையில் நடந்த மாற்றங்கள் அந்த எண்ணத்தை சற்று மாற்றியுள்ளன.

ஆர்சனல் அணியின் தற்காப்பு அரணை ஊடுருவுவது ஒன்றும் இயலாத காரியம் அல்ல என்பதை ஊல்வ்ஸ் குழு நிரூபித்துவிட்டது. அதே சமயம், ஸ்பர்ஸ் குழுவின் தற்காப்பும் அவ்வளவு சிறப்பாக இல்லை என்பதால், இரு குழுக்களும் கோல் போடும் வாய்ப்புள்ள இந்த ஆட்டம், நடுநிலையான காற்பந்து ரசிகர்களுக்கு ஒரு சிறந்த விருந்தாக அமையும் என்று கூறினால் அது மிகையன்று.

ஆர்சனல் அணி சுற்றியுள்ள விமர்சனங்களைப் புறந்தள்ளி, இந்த ஆட்டத்தில் ஒரு முக்கியமான வெற்றியைப் பதிவு செய்யும் சாத்தியம் அதிகம் உள்ளது.

வார இறுதி முடிவில் தனது முன்னிலை வெறும் இரண்டு புள்ளிகளாகக் குறைந்துவிடக் கூடாது என்பதில் ஆர்சனல் ஆட்டக்காரர்கள் உறுதியாக இருப்பார்கள் என்பதில் கடுகளவும் சந்தேகமில்லை.

மேலும், புதிய பயிற்றுவிப்பாளர் டியூடோருக்கு இது ஒரு சவால்மிக்க முதல் ஆட்டம் என்பதால், ஆர்சனல் அணி மூன்று புள்ளிகளைப் பெறத் தேவையான அனைத்தையும் செய்யும் என்று நம்பப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்