2028 யூரோ கிண்ணத்திற்குக் குறிவைக்கும் கேன்

2028 யூரோ கிண்ணத்திற்குக் குறிவைக்கும் கேன்

2 mins read
0f93b079-ebd2-45b4-8605-ebaba4d4e3bd
இங்கிலாந்துக் காற்பந்து அணித்தலைவர் ஹேரி கேன் (இடது), பயிற்றுவிப்பாளர் கேரத் சௌத்கேட் (வலது) ஆகியோருடன் பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக். - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

லண்டன்: வரும் 2028ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடக்கவிருக்கும் யூரோ கிண்ணக் காற்பந்துத் தொடரில் இங்கிலாந்து அணி மகுடம் சூடுவதற்கு உதவ விரும்புகிறார் அந்த அணியின் இப்போதைய தலைவர் ஹேரி கேன்.

இப்போது 30 வயதாகும் கேன், இன்னும் தன்னால் எட்டு, ஒன்பது ஆண்டுகளுக்கு விளையாட முடியும் என்று நம்புவதாகக் கூறினார்.

கடந்த 2020ஆம் ஆண்டு நடந்த யூரோ கிண்ணத் தொடரில் இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆயினும், லண்டன் வெம்பிளி அரங்கில் நடந்த அப்போட்டியில் இத்தாலியிடம் அது தோற்று ஏமாற்றமடைந்தது.

இந்நிலையில், அக்கிண்ணத்தை வெல்வதன் மூலம் தனது கனவு நனவாகும் என்கிறார் கேன்.

காற்பந்தானாலும் வேறு எந்த விளையாட்டானாலும், ஒருவர் 30 வயதை எட்டிவிட்டாலே அவர் ஓய்வுபெறுவதைப் பற்றி மற்றவர்கள் சிந்திக்கத் தொடங்கிவிடுவதாக கேன் சொன்னார்.

“ஆனால், என் காற்பந்து வாழ்க்கையின் இரண்டாம் பாதி இப்போதுதான் தொடங்கியிருப்பதாக நான் நினைக்கிறேன். இன்னும் என்னால் எட்டு, ஒன்பது ஆண்டுகளுக்கு விளையாட முடியும் என நம்புகிறேன்,” என்றார் அவர்.

முப்பத்தைந்து வயதைக் கடந்த பின்னரும் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் லயனல் மெஸ்ஸியும் இன்னும் உச்சத்திறனுடன் விளையாடி வருவதை அவர் சான்றாகக் குறிப்பிட்டார்.

ரொனால்டோ, மெஸ்ஸி, லெவண்டோஸ்கி, இப்ராகிமோவிச் போன்ற முன்னணி ஆட்டக்காரர்கள் 30 வயதைக் கடந்த பின்னரும் இன்னும் மேம்பட்ட திறனுடன் திடலில் செயல்பட்டதைக் காணலாம் என்று கேன் சுட்டிக்காட்டினார்.

கடந்த 2009ஆம் ஆண்டு முதல் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுவிற்காக விளையாடி வந்த கேன், இந்தப் பருவத்தில் ஜெர்மனியின் பயர்ன் மியூனிக் குழுவிற்கு மாறியது குறிப்பிடத்தக்கது.

2024ஆம் ஆண்டிற்கான யூரோ கிண்ணக் காற்பந்துப் போட்டிகளை ஜெர்மனி ஏற்று நடத்தவுள்ளது.

குறிப்புச் சொற்கள்