ஒருவர் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகுதான் அவர்வசம் உள்ள மசேநிதி சேமிப்பைத் தவணை முறையில் திரும்பப் பெறமுடியும். வாழ்நாள் முழுவதும் ஒரே வேலையைச் செய்து ஓய்வுபெற்ற பிறகே இச்சேமிப்பு பயன்படும் என்பது இந்தக் கொள்கை வகுக்கப்பட்டபோது இருந்த பரவலான கண்ணோட்டம்.
இக்காலத்திலோ வேலை நிலையாக இருப்பதில்லை. பல்வேறு காரணங்களுக்காக ஊழியர்கள், குறிப்பாக இளையர்கள் வேலை மாறுகின்றனர். சிலர் புதிய வேலையைத் தேடிக்கொள்வதற்கு முன்னரே ் பழைய வேலையை விட நேரிட்டு இருக்கலாம். அத்தகைய சூழல்களில் அவர்களின் மத்திய சேமநிதியில் உள்ள தொகை கைகொடுக்கக்கூடும்.
வேலையிடங்களில் புதிய திறன்கள் தேவைப்படும் நிலையில் ஊழியர்கள் தொடர்ந்து தங்கள் திறன்களை மேம்படுத்திக்கொண்டே இருக்கவேண்டிய சூழல் நிலவுகிறது. ஊதியமில்லா விடுப்புகள் போன்ற இடைவெளிகள் சிலருக்கு அதிகம் தேவைப்படலாம்.
வாழ்நாள் கல்வி முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில் மேலும் படிக்க ஆசைப்படுவோரும் உடல்நலக் குறைவால் ஓய்வு தேவைப்படுவோரும் குறுகிய காலத்திற்கு வேலையைத் தொடர முடியாமல் போகக்கூடும். ஓய்வுக்காலத்தைக் காட்டிலும் இதுபோன்ற அவசரச் சூழலில் சிலருக்கு மசே நிதித் தொகை தேவைப்படலாம்.
முன்னதாக மழலையர் கல்வித்துறையில் ஆசிரியராகப் பணியாற்றிய திருவாட்டி பவித்ரா ஷர்முகம், 30, காலஞ்சென்ற தமது மாமியாரை முழுநேரமாகப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததால் கடந்த ஆறு ஆண்டுகளாக ஒரே வேலையில் நீடிக்கமுடியவில்லை.
கணவரின் ஆதரவோடு திறன் மேம்பாட்டில் ஈடுபட்டாலும் முன்பு சேமித்த மசே நிதித் தொகையை இப்போது சிறிதளவு பயன்படுத்த முடிந்தால் நன்றாக இருக்கும் என்றார் அவர்.
"மனநல சிகிச்சைக்காக மெடிசேவ் பணத்தைப் பயன்படுத்தினேன். ஆனால் அதற்கான வருடாந்தர வரம்பையும் கடந்துவிட்டேன்," என்றார் திருவாட்டி பவித்ரா.
"ஏற்கெனவே மூன்றாண்டுகள் வேலை செய்து ஈட்டியுள்ள மசே நிதித் தொகையை முன்கூட்டியே பயன்படுத்துவதில் நன்மைகள் உள்ளன. படிப்புக்காகவும் மருத்துவத்திற்காகவும் என் பணத்தையே நான் செலவு செய்திருக்கலாம்," என்றார் அவர்.
இவரைப்போலவே பல ஆண்டுகள் முழுநேர வேலை இல்லாமல் தம் பெற்றோரின் ஆதரவில் இருந்தார் திருவாட்டி அபிராமி சுப்ரமணியன், 40. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வழக்கறிஞராகப் பணியாற்றும் அவர், அதற்குமுன் ஒன்பது ஆண்டுகளாக தன்னுரிமைத் தொழிலாளராக துணைப்பாட ஆசிரியராகப் பணியாற்றினார்.
"இதற்கு முன்பு வெளிநாட்டில் வேலை செய்தேன், அதனால் எனக்கு மத்திய சேமநிதிக் கணக்கில் பணம் இல்லை. என் நிலையில் இருப்பவர்களுக்கு மசே நிதியிலிருந்து உதவித் தொகை வழங்கப்பட்டால் நன்றாக இருக்கும். வேலையில் சேரவேண்டுமே என்ற நெருக்கடியால் சிலர் தங்களுக்குப் பொருந்தாத வேலைகளில் சேர்ந்து அவதிப்படுவதைத் தடுக்க இத்தகைய திட்டம் உதவக்கூடும்," என்று அவர் குறிப்பிட்டார்.

