இன்றைய உலகில் நிச்சயமற்ற தன்மையே கண்கூடாகத் தெரிவதால் அதிலிருந்து மீண்டெழ உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது என்றும் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
வருங்காலங்களில் காத்திருக்கும் எதிர்காலச் சவால்களை எதிர்கொள்ள சிங்கப்பூர் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றார் அவர்.
எரிபொருள் இருப்பு, உணவு கையிருப்புகளை அதிகரிப்பதுடன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற பங்காளித்துவ நாடுகளிடமிருந்து விநியோகத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளையும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதன்வழி மீள்திறனையும் தேசம் வலுவாக்குகிறது என்று தம் ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார் நிதி அமைச்சருமான வோங்.
ஈரான் போரால் உலகம் சந்தித்து வரும் இடர்களில் இருந்து மீள்வதற்கான ஆதரவு நடவடிக்கைகள், அதன் தொடர்பில் களம்காணவுள்ள திட்டங்கள் குறித்து செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) நாடாளுமன்றத்தில் துணைப் பிரதமர் கான் கிம் யோங், தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர் கா. சண்முகம், தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் ஆகியோர் விவரித்தனர்.
இதனைச் சுட்டிய பிரதமர், இதன்வழி நாடு தனது மீள்திறனை வலுப்படுத்தி வருவதாகவும் சொன்னார்.
இத்தகைய நிலைகளை சமாளிக்க உடனடி உதவிகளை வழங்கிடும் அதேவேளையில், வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்படி பெருநிறுவன வருமான வரித் தள்ளுபடி, இணையவழி ஊழியர்கள், டாக்ஸி ஓட்டுநர்களுக்கான ரொக்க உதவித்தொகை, குடும்பங்களுக்கான கூடுதல் உதவிகள் என கூடுதலாக 1 பில்லியன் வரையிலான உதவித் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார் திரு வோங்.
“எந்தவொரு சிங்கப்பூரரும் இந்தச் சவாலை தனியாக எதிர்கொள்ள வேண்டியதில்லை. நாம் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்போம். தேசமாக இதிலிருந்து அனைவரும் மீண்டு வருவோம்,” என்றும் பிரதமர் வோங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

