23வது ஷங்ரிலா கலந்துரையாடலில் உலகப் பிரமுகர்கள் பங்கேற்பர்

23வது ஷங்ரிலா கலந்துரையாடலில் உலகப் பிரமுகர்கள் பங்கேற்பர்

2 mins read
eafb31ac-2ef0-44c8-bc6e-f13b25bed023
கலந்துரையாடல் நடைபெறும் ஷங்ரிலா ஹோட்டலிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உச்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

வெள்ளிக்கிழமை (மே 29) முதல் ஞாயிற்றுக்கிழமை (மே 31) வரை 23வது ஷங்ரிலா கலந்துரையாடலை சிங்கப்பூர் ஏற்று நடத்தவுள்ளது.

லண்டனைத் தளமாகக் கொண்டுள்ள அனைத்துலக உத்திபூர்வ ஆய்வுக் கழகத்தால் (ஐஐஎஸ்எஸ்) ஏற்பாடு செய்யப்படும் வருடாந்தர நிகழ்வில், இந்த ஆண்டு, 44 நாடுகளின் 54 அமைச்சர்நிலைப் பிரதிநிதிகள், 42க்கும் மேற்பட்ட தற்காப்புப் படைத் தலைவர்கள், மூத்த தற்காப்பு அதிகாரிகள், முக்கியக் கல்வியாளர்கள் பங்கேற்கின்றனர்.

வியட்னாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும், வியட்னாம் சோ‌ஷியலிஸ்ட் குடியரசின் அதிபருமான டோ லாம், வெள்ளிக்கிழமை சிறப்புரை ஆற்றுவார். அத்துடன், திமோர்-லெஸ்டே குடியரசின் அதிபர் ஜோஸ் ராமோஸ்-ஹோர்டா சனிக்கிழமை உரையாற்றுவார்.

மேலும், அதிபர் தர்மன் சண்முகரத்னம் இஸ்தானாவில் சனிக்கிழமை வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றையும் நடத்துவார்.

ஆசிய-பசிபிக், ஐரோப்பா முழுவதிலும் உள்ள நாடுகளின் வலுவான பங்கேற்பைத் தவிர, இந்த ஆண்டு ஷங்ரிலா கலந்துரையாடலில் பங்கேற்கும் குறிப்பிடத்தக்க மற்ற பிரமுகர்களில் கத்தார்த் துணைப் பிரதமர் ஷேக் சவுத் அப்துல்ரஹ்மான் ஹசான், ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் தலைமைச் செயலாளர் நூர்லான் யெர்மெக்பாயேவ், அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் பீட் ஹெக்சேத் ஆகியோரும் அடங்குவர்.

தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங், ‘சிதைந்து வரும் உலகில் பரிணமிக்கும் பாதுகாப்பு பங்காளித்துவம்’ என்ற தலைப்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை உரையாற்றுவார்.

ஷங்ரிலா கலந்துரையாடலின் வழக்கமான அம்சமாக திரு சான், வருகை தரும் அமைச்சர்களுடன் வட்டமேசைக் கலந்துரையாடல்களில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் தற்காப்பு ஒப்பந்தம் ஒன்றில் அங்கம் வகிக்கும் ஐந்து நாடுகளின் தற்காப்பு அமைச்சர்களைத் திரு சான், காலை உணவின்போது சந்தித்து உரையாடுவார்.

2027ல் சிங்கப்பூர் ஆசியான் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கு முன்னதாக திரு சான், பிலிப்பீன்ஸ் தற்காப்பு அமைச்சர் கில்பெர்டோ தியோடோரோ ஜூனியருடன் இணைந்து, ஆசியான் தற்காப்பு அமைச்சர்களுடனான காலை உணவுச் சந்திப்பை இணைந்து நடத்துவார்.

பல்வேறு நாடுகளின் அமைச்சர்கள், மூத்த தற்காப்பு அதிகாரிகள் ஆகியோருடனான சந்திப்புகளிலும் திரு சான் இணைவார்.

குறிப்புச் சொற்கள்
தற்காப்புஆசியான்அதிபர் தர்மன்ஷங்ரி-லா