உலகக் கிண்ணக் காற்பந்து: சூதாட்டத்துக்கு எதிராக சிங்கப்பூர் அதிரடி நடவடிக்கை

உலகக் கிண்ணக் காற்பந்து: சூதாட்டத்துக்கு எதிராக சிங்கப்பூர் அதிரடி நடவடிக்கை

2 mins read
ea09ad4c-b0d4-473b-84dd-23b72f1ac004
சூதாட்டப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, சூதாட்ட அடிமைப்போக்குக்கு எதிரான தேசிய மன்றம், புதிய இயக்கத்துக்கான காணொளி ஒன்றையும் வெளியிடவுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகள் நெருங்கி வரும் வேளையில், சட்டவிரோதச் சூதாட்டத்துக்கு எதிரான அமலாக்க நடவடிக்கைகளைச் சிங்கப்பூர் உள்துறை அமைச்சு தீவிரப்படுத்தவுள்ளது.

அத்துடன், சூதாட்டப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, அளவுக்கு அதிகமான பந்தயங்களால் தமது குடும்பத்தையும் உடைமைகளையும் இழந்த இளம் ஆடவர் ஒருவரின் கதையை மையமாகக் கொண்டு, சூதாட்ட அடிமைப்போக்குக்கு எதிரான தேசிய மன்றம் புதிய இயக்கத்துக்கான காணொளி ஒன்றையும் வெளியிடவுள்ளது.

உலகக் கிண்ணப் போட்டிகள் ஜூன் 12 முதல் ஜூலை 20 வரை நடைபெறவுள்ள நிலையில், உள்துறை அமைச்சும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சும் இணைந்து செவ்வாய்க்கிழமையன்று (ஜூன் 9) இந்த அறிவிப்பை வெளியிட்டன.

உலகளாவிய விளையாட்டுப் போட்டிகளின்போது சூதாட்ட நடவடிக்கைகள் அதிகரிக்கும் என்பதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில், சிங்கப்பூர் பூல்ஸ் நிறுவனம் மட்டுமே அதிகாரபூர்வமாகப் பந்தயம் கட்ட உரிமம் பெற்றுள்ளது என்றும் அதைத் தவிர இணையத்திலும் வெளியிலும் செயல்படும் மற்ற அனைத்துச் சூதாட்ட அமைப்புகளும் சட்டவிரோதமானவை என்றும் அமைச்சுகள் தெளிவுபடுத்தியுள்ளன.

சட்டவிரோத இணையச் சூதாட்டச் சேவைகள் மற்றும் விளம்பரங்களை முடக்குவதற்கு ‘இணையக் குற்றத் தீங்குகள் சட்டத்தின்’ கீழ் காவல்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன் மூலம் சட்டவிரோதச் சூதாட்ட விளம்பரங்களுக்குப் பயன்படுத்தப்படும் உள்ளூர்த் தொலைபேசி எண்கள் ரத்து செய்யப்படுவதுடன், அவற்றுடன் தொடர்புடைய வங்கிக் கணக்குகளும் கடன் அட்டைப் பரிவர்த்தனைகளும் முடக்கப்படும்.

சிங்கப்பூரில் சட்டவிரோதச் சூதாட்டக் கும்பலை நடத்துபவர்களுக்கு $500,000 வரை அபராதமும் ஏழு ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம். அதே வேளையில், அத்தகைய சட்டவிரோதச் சூதாட்டக் கும்பல்களுடன் சூதாட்டத்தில் ஈடுபவோருக்கு $10,000 வரை அபராதம், ஆறு மாதங்கள் வரையிலான சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
சூதாட்டம்உலகக் கிண்ணம்காற்பந்து

தொடர்புடைய செய்திகள்