சாங்கி விமான நிலையத்தில் உலகக் கிண்ணக் காற்பந்து மோகம்

சாங்கி விமான நிலையத்தில் உலகக் கிண்ணக் காற்பந்து மோகம்

2 mins read
c0d5dfa2-3660-46db-94ae-7ad807a407ac
உலகக் கிண்ணப் போட்டியின் 104 ஆட்டங்களையும் முனையம் 3ல் உள்ள ST3PS அரங்கத்திலும் அதன் டிரான்சிட் பகுதிகளிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும்.  - படம்: சாங்கி விமான நிலையக் குழுமம்
Google News Preferred Icon

உலகக் கிண்ணக் காற்பந்து மோகம், சாங்கி விமான நிலையத்திலும் இறக்கைகட்டிப் பறக்கத் தொடங்கியுள்ளது. வியாழக்கிழமை (ஜூன் 11) முதல் ஜூலை 19 வரை நடைபெறவுள்ள உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியையொட்டி, ரசிகர்களுக்கான பிரத்தியேகக் கொண்டாட்டங்களும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் விமான நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

உலகக் கிண்ணப் போட்டியின் 104 ஆட்டங்களையும் முனையம் 3ல் உள்ள ST3PS அரங்கத்திலும் அதன் டிரான்சிட் பகுதிகளிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும். அதோடு, உலகக் கிண்ண உணர்வை வெளிப்படுத்தும் புதிய குறும்படத்தையும் விமான நிலையம் முழுவதுமான சிறப்புச் செயல்பாடுகளையும் சாங்கி விமான நிலையக் குழுமம் வியாழக்கிழமை அறிவித்தது.

‘வேர் த வோர்ல்ட் கம்ஸ் டூ பிளே’ எனும் அப்படத்தில் பல சிங்கப்பூர் தேசியக் காற்பந்து வீரர்கள் நடித்துள்ளனர். அதோடு, சிங்கப்பூர் காற்பந்துச் சகாப்தம் ஃபான்டி அகமதும் அப்படத்தில் ஒரு காட்சியில் இடம்பெற்றுள்ளார்.

சாங்கி விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட புதிய படத்தின் தொடக்கக் காட்சியில், சிங்கப்பூர் தேசியக் காற்பந்து அணித் தலைவர் ஹாரிஸ் ஹரூன் (இடது) பந்தை உதைத்து ஆட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.
சாங்கி விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட புதிய படத்தின் தொடக்கக் காட்சியில், சிங்கப்பூர் தேசியக் காற்பந்து அணித் தலைவர் ஹாரிஸ் ஹரூன் (இடது) பந்தை உதைத்து ஆட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். - படம்: சாங்கி விமான நிலையக் குழுமம்

ரசிகர்கள் முனையம் 3ன் பொது இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘ஃபுட்பால் சாம்பியன்ஸ் ட்ரெயில்’ எனும் புதிர்களிலும் சவால்களிலும் பங்கேற்று, $50க்கும் அதிக மதிப்புள்ள பரிசுகளை வெல்லலாம்.

இச்சவால்களில் பங்கேற்பவர்கள் பிரத்தியேக விலைச் சலுகைகளைப் பெற முடியும். சவால்களை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு ஜுவல் சாங்கி விமான நிலையத்தின் ‘கேனபி பார்க்’கில் உள்ள 'பவுன்சிங் நெட்’ விளையாட்டுக்கான $24.90 மதிப்புள்ள இலவச அனுமதிச்சீட்டு வழங்கப்படும்.

நள்ளிரவிலும் அதிகாலையிலும் நேரலையாகக் காற்பந்து ஆட்டங்களைக் காணும் ரசிகர்களுக்காக சாங்கி விமான நிலையத்தில் இரவு நேர மற்றும் 24 மணி நேர உணவக வசதிகள் உள்ளன.

டிரான்சிட் பயணிகளுக்காகவும் காற்பந்து சார்ந்த சுவாரசியமான விளையாட்டுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் பயணிகள் தங்களது ஆற்றலைப் பரிசோதித்து சிறப்புப் பரிசுகளை வெல்லலாம். இதில் வெற்றிபெறுபவர்களுக்கு முதல் பரிசாக $1,000 மதிப்புள்ள 200,000 ‘சாங்கி ரிவார்ட்ஸ்’ புள்ளிகள் வழங்கப்படும்.

குறிப்புச் சொற்கள்
உலகக் கிண்ணம்காற்பந்துசாங்கி விமான நிலையம்