எட்டுத் தொழில்களுக்கு வேலை அனுமதிப் பட்டியல் விரிவாக்கம்

எட்டுத் தொழில்களுக்கு வேலை அனுமதிப் பட்டியல் விரிவாக்கம்

2 mins read
14d1c6c8-7069-4be1-8916-b0b2d5cfad6a
உணவகப் பணியாளர் உள்பட உணவு, பானத் துறைக்கான மேலும் நான்கு புதிய தொழில்களை உள்ளடக்கும் வகையில் தொழில் பட்டியல் விரிவு செய்யப்படும்.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

புதிதாக எட்டுத் தொழில்கள், ‘என்டிஎஸ்’ (NTS) எனப்படும் பாரம்பரியமற்ற வளங்கள் (Non-Traditional Sources) தொழில் பட்டியலில் சேர்க்கப்படும்.

அவை உணவுச் சேவை, சமூகச் சேவை, விமானப் போக்குவரத்து ஆகிய துறைகளைச் சேர்ந்த தொழில்களாக இருக்கும் என்று மனிதவள அமைச்சர் டாக்டர் டான் சீ லெங் அறிவித்தார்.

இந்த மாற்றம் இவ்வாண்டு செப்டம்பர் மாதம் முதல் அமலுக்கு வரும் என நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 3) மனிதவள அமைச்சுக்கான வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீட்டு விவாதத்தின்போது அவர் தெரிவித்தார்.

உணவகப் பணியாளர் உள்பட உணவு, பானத் துறைக்கான மேலும் நான்கு புதிய தொழில்களை உள்ளடக்கும் வகையில் தொழில் பட்டியல் விரிவு செய்யப்படும். உயர்த்தப்பட்ட எஸ்-பாஸ் தகுதிச் சம்பளத்தை எட்ட இயலாத ஊழியர்களை முதலாளிகள் இதன்வழி தங்கள் வர்த்தகங்களில் தக்கவைக்கலாம் என்று டாக்டர் டான் கூறினார்.

குறிப்பாக, ‘என்டிஎஸ்’ (NTS) எனப்படும் பாரம்பரியமற்ற வளங்கள் தொழில் பட்டியலின்கீழ் பங்களாதேஷ், பூட்டான், கம்போடியா, இந்தியா, லாவோஸ், மியான்மர், பிலிப்பைன்ஸ், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் அல்லது வட்டாரங்களில் இருந்து, குறிப்பிட்ட சில தொழில்களுக்கு மட்டும் வேலை அனுமதிச் சீட்டு (Work Permit) வைத்திருப்பவர்களைப் பணிக்கு அமர்த்த நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படும்.

நெருக்கடிக்கு இடையே செயல்பட்டு வரும் உள்ளூர் வர்த்தகங்கள், நேரடி வாடிக்கையாளர் சேவைக்காக எஸ்-பாஸ் அட்டைதாரர்களை நம்பியிருப்பதால் எதிர்நோக்கும் சவால்களைப் பற்றி நியமன நாடாளுமன்ற உறுப்பினர் மார்க் லீ பகிர்ந்ததையும் டாக்டர் டான் சுட்டினார்.

“பல்வேறு துறைகளைச் சேர்ந்த அமைப்புகள், தொழில்துறை பங்காளிகள் ஆகியோருடனான அணுக்கமான ஆலோசனையின் அடிப்படையில் எங்களது கொள்கை மாற்றங்கள் உருவாக்கப்படுகின்றன.

தேவையான, உத்திபூர்வமான இடங்களில் தானியக்க முறைக்கும் உள்ளூர்மயமாதலுக்கும் அதிக வாய்ப்பில்லை எனும்போது வெளிநாட்டு ஊழியர்களைப் பணியமர்த்துவதில் நீக்குப்போக்கு வழங்குவதில் மனிதவள அமைச்சு மற்ற அமைப்புகளுடன் செயலாற்றும்,” என்று அவர் கூறினார்.

தொடர்ந்து முதலீடுகளையும் திறன்களையும் ஈர்க்கும் சிங்கப்பூரின் ஆற்றலைக் கருத்தில்கொண்டு, வர்த்தகச் செலவுகளை அரசாங்கம் கூர்ந்து கண்காணிப்பதாக டாக்டர் டான் குறிப்பிட்டார்.

மேலும், 2026ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் ஊழியரணி மேம்பாட்டு மானியம் (வேலை மறுவடிவமைப்பு) (WDG(JR+)) அறிமுகம் செய்யப்படும் என்றும் டாக்டர் டான் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்