மாபெரும் திட்டங்களுடன் உருவாகும் புதிய உட்லண்ட்ஸ் கேட்வே

மாபெரும் திட்டங்களுடன் உருவாகும் புதிய உட்லண்ட்ஸ் கேட்வே

2 mins read
ab186889-258a-4d72-aa96-5b20d6af2afe
பல்வேறு போக்குவரத்தை இணைக்கும் வகையில் உட்லண்ட்ஸ் கேட்வே இருக்கும் என ஜேடிசி தெரிவித்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரில் புதிதாகக் கட்டப்படவிருக்கும் ‘உட்லண்ட்ஸ் கேட்வே’ ஒரு மாபெரும் போக்குவரத்து மையமாக உருவாகவுள்ளது. மலேசியாவிலிருந்து சிங்கப்பூரில் நுழையும் ரயில் சேவையுடன் இணைக்கப்பட்டு சில்லறைக் கடைகள், அலுவலகங்கள், தொழில்களுக்கான இடங்கள், பொழுதுபோக்கிற்கான பசுமைப்பகுதிகள் போன்றவற்றை உள்ளடக்கி ஒரு புதிய அனுபவத்தைத் தரும் வளாகமாக அது உருவெடுக்கவிருக்கிறது.

அதன் நிலத்தடியில் கனரக வாகனங்களும் லாரிகளும் செல்லும் வகையில் சாலைக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் தரைமட்டத்தில் கனரக வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும்.

இந்த உட்லண்ட்ஸ் கேட்வேயில் பூங்காக்கள் உள்ளிட்ட சமூக வசதிகளும் பாதசாரிகளும் சைக்கிளோட்டிகளும் அக்கம்பக்க குடியிருப்புகளுக்கு எளிதாகச் சென்றுவருவதற்கான ஆகாய இணைப்புப் பாலங்களும் கட்டப்படவுள்ளன.

ஜேடிசி கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ள ஒப்பந்தக் குத்தகை ஆவணங்களில் இது குறித்த விவரங்கள் விவரிக்கப்பட்டுள்ளதாக ‘தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளேடு தெரிவித்தது.

மலேசியாவிலிருந்து வரும் ரயில்களுக்கு முதல் நுழைவு வாயிலாக உட்லண்ட்ஸ் கேட்வே இருக்கும். இதனால் சிங்கப்பூருக்குள் நுழையும் பயணிகளுக்கு ஒரு சிறந்த அனுபவத்தையும் தோற்றத்தையும் அளிக்கும் வகையில் கட்டடம் வடிவமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“போக்குவரத்து, வர்த்தகம், தொழில்களுக்கான அலுவலகங்கள் உட்பட பல வசதிகள் ஒரே இடத்தில் இணைக்கப்படுவதன் மூலம் திட்டமிடல், புத்தாக்கம், வடிவமைப்பு ஆகியவற்றில் சிங்கப்பூரின் திறன்களை பறைசாற்றும் ஒரு முக்கிய எடுத்துக்காட்டாக இந்த மேம்பாடு விளங்கும்,” என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

சுமார் 5.66 ஹெக்டேர் அல்லது கிட்டத்தட்ட எட்டு காற்பந்து திடல்களின் பரப்பளவைக் கொண்ட இந்தப் போக்குவரத்து முனையம் 2030ஆம் ஆண்டிற்குள் நிறைவடையும்.

முதற்கட்ட கட்டுமானத்தில் சுமார் 6,500 சதுர மீட்டர் பரப்பளவிலான பேருந்து முனையம், 28,000 சதுர மீட்டர் பரப்பளவில் சில்லறை வர்த்தகங்களுக்கான இடம், 22,000 சதுர மீட்டர் பரப்பளவில் அலுவலக இடங்கள் ஆகியவை இடம்பெறும் என்று ஜேடிசி தெரிவித்தது.

இந்த முனையம், வரவிருக்கும் ஜோகூர் பாரு-சிங்கப்பூர் (ஆர்டிஎஸ்) ரயில் சேவையுடன் நேரடியாக இணைக்கப்பட்டிருக்கும். தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் தடத்தில் உள்ள உட்லண்ட்ஸ் நார்த் எம்ஆர்டி நிலையத்துடன் இது இணைக்கப்படும்.

வர்த்தக, தொழில் அமைச்சின்கீழ் இயங்கும் ஓர் அமைப்பான ஜேடிசி, இந்த மேம்பாடு பல தரப்பட்ட போக்குவரத்து முறைகளை ஒருங்கிணைத்து சிறந்த, எதிர்காலத்திற்கு ஏற்ற போக்குவரத்து முனையமாக இருக்கும் என்று கூறியது.

இந்தப் போக்குவரத்து மையத்தைத் தவிர, இத்திட்டத்தில் 104,000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட இரு தொழிற்சாலைக் கட்டடங்களும் அமையவுள்ளன. இதில் ஒரு கட்டடத்தின் கட்டுமானம் 2031ஆம் ஆண்டிலும் மற்றொரு கட்டடத்தின் கட்டுமானம் 2034ஆம் ஆண்டிலும் நிறைவடையும்.

இது குறித்து ஜூலை 8ஆம் தேதி ‘தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த ஜேடிசி, உட்லண்ட்ஸ் கேட்வேயில் உள்ள வணிக, பொதுமக்களுக்கான வாழ்வியல் வசதிகள், அங்கு வரும் பயணிகள், அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகள், தொழில் வளாகங்களில் வசிப்போர், பணிபுரிவோரின் புதிய தேவைகளைப் பூர்த்தி செய்யும் என்று தெரிவித்தது.

உட்லண்ட்ஸ் கேட்வே தோற்றத்தைக் காட்டும் படம். ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்பு பொருளியல் வட்டாரத்துடன் உட்லண்ட்ஸ் கேட்வே இணைக்கப்பட்டிருக்கும்.
உட்லண்ட்ஸ் கேட்வே தோற்றத்தைக் காட்டும் படம். ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்பு பொருளியல் வட்டாரத்துடன் உட்லண்ட்ஸ் கேட்வே இணைக்கப்பட்டிருக்கும். - படம்: வர்த்தக, தொழில் அமைச்சு
குறிப்புச் சொற்கள்