உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் 50க்கு மேற்பட்ட வாகன ஓட்டிகள் பிடிபட்டனர்

உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் 50க்கு மேற்பட்ட வாகன ஓட்டிகள் பிடிபட்டனர்

2 mins read
ஜூன் மாதப் பள்ளி விடுமுறைக் காலத்தில் போக்குவரத்துக் குற்றச்செயல்களில் ஈடுபட்டனர்
67f77bfc-a9b6-4fbc-8bbb-e9004d5c3241
குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம், ஜூன் விடுமுறைக் காலத்தின்போது தவறிழைக்கும் வாகன ஓட்டிகளைப் பிடிக்கும் நோக்கில் சோதனை நடவடிக்கைகளை அதிகரித்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

கடந்த ஜூன் பள்ளி விடுமுறையின்போது உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் போக்குவரத்துக் குற்றச்செயல்களில் ஈடுபட்ட வாகன ஓட்டிகள் 14 பேர் சிங்கப்பூருக்குள் வர அனுமதி மறுக்கப்பட்டது.

போக்குவரத்துக் குற்றங்கள், வரிசையில் காத்திராதது, சாலையில் அபாயகரமாக நடந்துகொண்ட இதர நடவடிக்கைகள் போன்றவற்றுக்காகப் பிடிபட்ட 52 பேரில் அவர்களும் அடங்குவர். குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம், புதன்கிழமை (ஜூலை 8) வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த ஆண்டு மே 30 முதல் ஜூன் 28ஆம் தேதி வரை பள்ளி விடுமுறைக் காலம். அந்தக் காலகட்டத்தில் ஆணையம் சோதனை நடவடிக்கைகளை அதிகரித்தது.

சோதனைச்சாவடியிலிருந்து வெளியேறியபோது இரட்டை வெள்ளைக் கோடுகள் இருந்த பகுதியில் சாலைத் தடத்தைக் கடந்தது, சட்டவிரோதமாக வலப்பக்கம் திரும்பியது, ஆபத்து அல்லது இடையூறு விளைவிக்கும் வகையில் வாகனத்தை நிறுத்தியது போன்ற நடவடிக்கைகளில் 45 பேர் ஈடுபட்டதாக ஆணையம் கூறியது.

அவர்களில் 34 பேர் மீண்டும் வரிசையில் வரும்படி உத்தரவிடப்பட்டனர். வெளிநாட்டில் பதிவுசெய்யப்பட்ட வாகனங்களை ஓட்டிய 11 பேருக்குச் சிங்கப்பூருக்குள் வர தடை விதிக்கப்பட்டது. மேலும், அந்த 45 பேரில் 27 பேர் மேல்நடவடிக்கைக்காகப் போக்குவரத்துக் காவல்துறையினரிடம் அனுப்பப்பட்டனர்.

சோதனைச்சாவடிக்கு வருகைதரும் பகுதியில் வரிசையில் முந்திச் சென்றது, இரட்டை வெள்ளைக் கோட்டுப் பகுதியில் சாலை விதியைப் பின்பற்றாதது ஆகியவை தொடர்பில் வாகன ஓட்டிகள் எழுவர் பிடிபட்டனர். அவர்களில், வெளிநாட்டு வாகனங்களை ஓட்டிய மூவருக்குச் சிங்கப்பூருக்கு வர தடை விதிக்கப்பட்டது. மற்ற நால்வரும் போக்குவரத்துக் காவல்துறையிடம் அனுப்பப்பட்டனர்.

அனைவருக்கும் பாதுகாப்பான, இனிமையான பயண அனுபவத்துக்கான வாய்ப்பை உருவாக்கும் நோக்கில், நிலச் சோதனைச்சாவடிகளில் சாலை விதிகளைப் பின்பற்றி நடக்கும்படியும் அதிகாரிகளுடன் ஒத்துழைக்கும்படியும் ஆணையம் கேட்டுக்கொண்டது. பயணிகள் தொடர்ந்து பொறுமையுடனும் புரிதலுடனும் நடந்துகொள்ள வேண்டும் என்று அது வலியுறுத்தியது.

குறிப்புச் சொற்கள்
உட்லண்ட்ஸ்சோதனைச் சாவடிவாகன ஓட்டிபோக்குவரத்துகுற்றச்செயல்