மீண்டும் வேலைக்குத் திரும்பும் ஊழியர்களுக்கு ஏஐ தொழில்நுட்ப அறிவு அவசியம்

துணையமைச்சர் ரஹாயு மஹ்ஸாம் வலியுறுத்து

மீண்டும் வேலைக்குத் திரும்பும் ஊழியர்களுக்கு ஏஐ தொழில்நுட்ப அறிவு அவசியம்

2 mins read
14631c94-fb49-4e05-8ef3-a6d04081aa2a
தகவல், மின்னிலக்க மேம்பாட்டுத் துணையமைச்சர் ரஹாயு மஹ்ஸாம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரில் சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் வேலைக்குத் திரும்புவோர், சம்பந்தப்பட்ட தொழில்துறையிலும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திலும் சிறந்து விளங்குவது மிகவும் முக்கியம் என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டுத் துணையமைச்சர் ரஹாயு மஹ்ஸாம் கூறியிருக்கிறார்.

அது பகுதி மின்கடத்தித் துறைக்கு மட்டுமின்றி எல்லாத் துறைகளுக்கும் பொருந்தும் என்றார் அவர்.

வேலைக்கு நடுவே சிறிது காலம் இடைவெளி எடுக்கும் போக்கு ஆண்களைவிட பெண்களிடையே அதிகம் தென்படுவதாக ஆய்வுகள் காட்டுவதை அவர் சுட்டினார்.

சிங்கப்பூர்ப் பகுதி மின்கடத்தித் தொழில்துறைச் சங்கம் புதன்கிழமை (மார்ச் 11) ஏற்பாடு செய்த மகளிர் கருத்தரங்கில் திருவாட்டி ரஹாயு பேசினார்.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத் திறனை நன்கு பயன்படுத்த 100,000 ஊழியர்களுக்கு அரசாங்கம் ஆதரவளிக்கவிருப்பதை அவர் சுட்டினார்.

சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் வேலைக்கு வரும் ஊழியர்கள், புதிய முன்னேற்றங்கள் குறித்துத் தெரியவில்லை என்று கவலைப்படத் தேவையில்லை; அதற்குச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் கைகொடுக்கும் என்றார் அவர். தற்போதைய நடப்புகளை அறிந்துகொள்ளவும் சொந்த வளர்ச்சியில் கவனம் செலுத்தவும் ஊழியர்களுக்கு அது வாய்ப்புகளை வழங்கும் என்று திருவாட்டி ரஹாயு கூறினார்.

ஊழியர்களும் சரியான மனப்போக்கோடு வளர்ச்சி வாய்ப்புகளைப் பெறுவதில் முனைப்புடன் இருக்கவேண்டும் என்று அவர் தெரிவித்தார். அதே நேரம் நிறுவனங்களும் அவர்களுக்கு உதவ வேண்டும் என்று திருவாட்டி ரஹாயு கேட்டுக்கொண்டார்.

பகுதி மின்கடத்தித் துறையில் உள்ள நிறுவனங்கள் நீக்குப்போக்கான வேலை நடைமுறைகளைப் பின்பற்றுவதை அவர் பாராட்டினார். ஊழியர்கள் வீட்டிலும் வேலையிடத்திலும் பொறுப்புகளைச் சரிவரக் கையாள நிறுவனங்கள் அத்தகைய ஆதரவைத் தொடர்வது முக்கியம் என்றார் திருவாட்டி ரஹாயு.

ஊழியர்களுக்கு முறையான வழிகாட்டுதலும் முக்கியம் என்று அவர் வலியுறுத்தினார். நிறுவனங்களில் பாதிக்கும் குறைவானவையே அதற்குரிய திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளதாகக் கருத்தாய்வில் தெரியவந்துள்ளதாகவும் அவர் சொன்னார்.

பகுதி மின்கடத்தித் தொழில்துறைச் சங்கம், மென்ட்டோரிங் எஸ்ஜி அமைப்புடன் சேர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட வழிகாட்டிகளை உருவாக்கியிருப்பதைத் திருவாட்டி ரஹாயு பாராட்டினார்.

உலக அளவில் ஆண்டுதோறும் மின்சில்லுகளில் 10 விழுக்காடும் பகுதி மின்கடத்திகளை உருவாக்க உதவும் கருவிகளில் ஏறக்குறைய 20 விழுக்காடும் சிங்கப்பூரில் தயாரிக்கப்படுகின்றன.

சிங்கப்பூர்ப் பொருளியலில் பகுதி மின்கடத்தித் துறையின் பங்கு கிட்டத்தட்ட ஆறு விழுக்காடு. அத்துறையில் 35,000க்கும் மேற்பட்டோர் இங்கு வேலை செய்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்
செயற்கை நுண்ணறிவுபகுதி மின்கடத்திபெண்கள்