முதலாளியிடம் $1.8 மில்லியன் திருடிய பெண்ணுக்கு 3 ஆண்டுக்குமேல் சிறை

முதலாளியிடம் $1.8 மில்லியன் திருடிய பெண்ணுக்கு 3 ஆண்டுக்குமேல் சிறை

2 mins read
8eef23e3-18f9-404e-9a13-9ecbfcf5e277
திங்கட்கிழமை (மார்ச் 23) அரசு நீதிமன்ற வளாகத்திலிருந்து புறப்பட்ட ஜூடி தே முய் எங், 61. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2
Google News Preferred Icon

தம் முதலாளியிடமிருந்து $1.8 மில்லியனுக்கும் அதிகமான பணத்தைக் கையாடல் செய்த பெண் ஒருவருக்கு திங்கட்கிழமை (மார்ச் 23) மூன்று ஆண்டு, மூன்று மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

வணிகப் பதிவேட்டின்படி, முன்னதாகப் பல மதுபானக் கூடங்களின் இயக்குநராக இருந்த ஜூடி தே முய் எங், 61, தமது சொந்தத் தொழில்களுக்கும் குடும்பச் செலவுகளுக்காகவும் ஏழாண்டு காலத்தில் இந்தப் பணத்தைத் திருடினார்.

மோசடி, குற்றச்செயல்கள் மூலம் ஆதாயம் அடைந்தது தொடர்பான 26 குற்றச்சாட்டுகளை அவர் ஜனவரி 12ஆம் தேதி ஒப்புக்கொண்டார். தண்டனை விதிப்பின்போது இதுபோன்ற 130க்கும் மேற்பட்ட பிற குற்றச்சாட்டுகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

தே, முழுத் தொகையையும் திருப்பிச் செலுத்திவிட்ட போதிலும், “அவரது குற்றங்கள் கண்டுபிடிக்கப்படும் வரை அவை தொடர்ந்தன,” என்று துணை அரசு வழக்கறிஞர் யீ ஜியா ரோங் குறிப்பிட்டார்.

“அவர் தானாக முன்வந்து தனது தவற்றை ஒப்புக்கொள்ளவில்லை. அவரது செயல்கள் கண்டுபிடிக்கப்பட்டு, ஆட்டம் முடிவுக்கு வந்த பின்னரே அவர் குற்றங்களை நிறுத்தினார்,” என்று அரசு வழக்கறிஞர் கூறினார்.

தே, ஜூன் 2010 முதல் ஏப்ரல் 2017 வரை ஒரு தவணைமுறை கொள்முதல் நிறுவனத்தின் இயக்குநருக்குத் தனிப்பட்ட உதவியாளராகப் பணியாற்றியபோது இக்குற்றங்களைப் புரிந்தார்.

அந்நிறுவனத்தின் மற்றோர் இயக்குநரான தம் முதலாளியின் சகோதரருக்கு வழங்கப்பட வேண்டிய கட்டணப் பற்றுச்சீட்டுகள், காசோலைகளைத் தயார்செய்வதும் தேயின் பொறுப்புகளில் அடங்கும்.

மே 2017ல் அவரின் முதலாளி இந்த முறைகேடுகளைக் கண்டுபிடித்து, விசாரணைக்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து தே சிக்கினார்.

தண்டனையைக் குறைக்கும்படி கோரிய தமது மனுவில், தாம் செய்த தவற்றுக்காக உண்மையிலேயே வருந்துவதாகவும் முதலாளிகளுக்குப் பணத்தைத் திருப்பிச் செலுத்துவதற்காகக் கடன் வாங்கியதுடன், தமது நகைகளையும் அடகு வைத்துப் பணம் திரட்டியதாகவும் தே நீதிமன்றத்தில் கூறினார்.

குறிப்புச் சொற்கள்