மீண்டும் மீண்டும் புறாக்களுக்குத் தீனி போட்ட மாதிற்கு அபராதம்

மீண்டும் மீண்டும் புறாக்களுக்குத் தீனி போட்ட மாதிற்கு அபராதம்

2 mins read
884df9c1-47c9-4f86-9727-b4f28600b5ce
யுவென் லி ஷுவென். - படம்: ஷின் மின் டெய்லி நியூஸ்
Google News Preferred Icon

புறாக்களுக்குத் தீனி போட்டதற்காக கடந்த ஆண்டு ஏப்ரலில் $4,800 அபராதம் விதிக்கப்பட்ட மாது ஒருவர், தண்டிக்கப்பட்டு ஒரு மாதம்கூட ஆகாத நிலையில் மீண்டும் குற்றம் புரிந்தார்.

இந்த முறை, 60 வயது சிங்கப்பூரரான யெவென் லி ஷுவென் பொது இடத்திலிருந்தும் அவரது வீட்டிலிருந்தும் சட்டவிரோதமாகப் புறாக்களுக்கு 17 முறை தீனி போட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

கருணையின் காரணமாகத் தொடர்ந்து பறவைகளுக்குத் தீனி போட்டதாகக் கூறிய யுவெனுக்கு வியாழக்கிழமை (மார்ச் 19) நீதிமன்றத்தில் $9,000 அபராதம் விதிக்கப்பட்டது.

வனவிலங்குச் சட்டத்தின்கீழ், வனவிலங்குகளுக்குச் சட்டவிரோதமாகத் தீனி போட்டதாகத் தம்மீது சுமத்தப்பட்ட ஆறு குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார். மேலும் 11 குற்றச்சாட்டுகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

கடந்த ஆண்டு ஏப்ரலில், புறாக்களுக்குத் தீனி போட்டதற்காக யுவென் மீது குற்றஞ்சாட்டப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அதன் பிறகு, அவர் அன்றாடம் இருமுறை அவ்வாறு செய்ததாக தஞ்சோங் பகார் நகர மன்றம் புகார் செய்தது.

அதனைத் தொடர்ந்து, தேசிய பூங்காக் கழகம் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அப்போது, சென்ற ஆண்டு மே மாதத்துக்கும் ஜூலை மாதத்துக்கும் இடையே தஞ்சோங் பகாரிலும் சைசீயிலும் அவர் புறாக்களுக்குத் தீனி போடுவதை அதிகாரிகள் கண்டனர்.

விசாரணையின்போது, குற்றங்களை ஒப்புக்கொண்ட அந்த மாது, வனவிலங்குகளுக்குத் தீனி போடுவது குற்றம் என்பதைத் தாம் அறிந்துள்ளதாகவும் கருணையின் அடிப்படையில் அவ்வாறு செய்ததாகவும் கூறினார்.

“அவரின் செயலால் பொதுச் சுகாதார ஆபத்து உள்ளது,” என்று அரசுதரப்பு வழக்கறிஞர் கூறினார். அதோடு, புறாக்களுக்குக் கடுமையான நோய்கள் இருப்பதாகவும் அவற்றின் எச்சங்கள் சுற்றுப்புறத்திற்குக் கேடு விளைவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வேண்டுமென்றே வனவிலங்குகளுக்குத் தீனி போட்டதற்காகச் சுமத்தப்பட்ட ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும், ஒருமுறைக்கு மேல் குற்றம் புரிந்ததால் அந்த மாதிற்கு $10,000 வரை அபராதம் விதிக்கப்பட்டிருக்கலாம்.

குறிப்புச் சொற்கள்