சிங்கப்பூரில் அரசாங்க அதிகாரிபோலத் தம்மைக் காட்டிக்கொள்ளும் ஆள்மாறாட்ட மோசடியில் ஈடுபட்ட சந்தேகத்தில் 34 வயது மலேசியப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
செவ்வாய்க்கிழமை (மே 19) சிங்கப்பூரைவிட்டு வெளியேற முயன்றபோது பிடிபட்ட அவரிடமிருந்து காவல்துறையினர் இரண்டு தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய்தனர்.
அவரையும் சேர்த்து, கடந்த மார்ச் மாதம் முதல் சிங்கப்பூரில் மோசடிக் கும்பல்களுக்குத் துணைபோன சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள 26வது மலேசியர் என்று காவல்துறை புதன்கிழமை (மே 20) தனது அறிக்கையில் குறிப்பிட்டது.
மோசடியில் சிக்கிய ஒரு பெண்ணிடமிருந்து கடந்த செவ்வாய்க்கிழமை புகார் பெறப்பட்டதாகவும் அது தெரிவித்தது.
தம்மைக் காவல்துறை அதிகாரி என்று கூறிக்கொண்ட ஒருவர், பண மோசடி நடவடிக்கைகளுக்காக விசாரணை நடத்துவதாக அந்தப் பெண்ணிடம் கூறியுள்ளார்.
விசாரணைக்காக வங்கிக் கணக்கையும் தனிப்பட்ட விவரங்களையும் ஒப்படைக்க வேண்டும் என்றும் வங்கியிலிருந்து பணத்தை எடுத்து அதனைச் சொந்த நகைகளுடன் சேர்த்து, தாம் அனுப்பும் முகவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவரிடம் அந்த மர்ம நபர் கூறியதாகக் காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.
அதற்கு இணங்கி, $13,700 ரொக்கத்தையும் நகைகளையும் கோவன் அருகே வந்த 34 வயது மலேசியப் பெண்ணிடம் கொடுத்ததாக, பாதிக்கப்பட்ட பெண் தமது புகாரில் தெரிவித்தார்.
விசாரணை பற்றிய விவரங்களைத் தமது குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட எவரிடமும் தெரிவிக்கக்கக்கூடாது என்று அந்தப் பெண் எச்சரிக்கப்பட்டதாகவும் காவல்துறை கூறியது.
தொடர்புடைய செய்திகள்
பின்னர் ஒரு கட்டத்தில், தாம் மோசடியில் ஏமாற்றப்பட்டது குறித்து தெரிந்ததும் காவல்துறையில் அவர் புகாரளித்தார்.
அதனைத் தொடர்ந்து, மோசடித் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் தொடர் விசாரணைகளின் மூலம் சந்தேக நபரை அடையாளம் கண்டு, புகார் அளிக்கப்பட்ட அதே நாளில் கைது செய்தனர்.

