நீண்டகால நண்பர்களை அலட்சியமாகக் கருதக்கூடாது: விவியன் பாலகிருஷ்ணன்

தொடர்பைப் பேணுவதன் அவசியம் பற்றி அமைச்சர் விவியன்

நீண்டகால நண்பர்களை அலட்சியமாகக் கருதக்கூடாது: விவியன் பாலகிருஷ்ணன்

2 mins read
4993da96-7168-4f53-ae50-ae0d67eee03d
வடகொரிய வெளியுறவு அமைச்சர் சோ சோன் ஹுவியின் அழைப்பை ஏற்று மே 26, 27ஆம் தேதிகளில் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வடகொரியாவுக்குப் பயணம் மேற்கொண்டார். - படம்: சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு
Google News Preferred Icon

உலகெங்கும் விநியோகத்தில் அபாயங்கள், சிதைந்துபோன பங்காளித்துவங்கள், நிச்சயமற்றதாக உள்ள அரசதந்திர உறவுகள் ஆகியவற்றால் உலகம் தடுமாற்றங்களை எதிர்நோக்குவதாக வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சீனா, வடகொரியா, தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு ஐந்து நாள் அதிகாரபூர்வப் பயணமாகச் சென்றுள்ள டாக்டர் விவியன், வியாழக்கிழமை (மே 28) சிங்கப்பூருக்குத் திரும்பும் முன் செய்தியாளர்களிடம் பேசினார்.

“நீண்டகால நண்பர்களை நாம் அலட்சியமாகக் கருதக்கூடாது,” என்று தனது வடகொரியா பயணத்தைப் பற்றிக் கேட்டபோது தெரிவித்தார் டாக்டர் விவியன்.

வடகொரிய வெளியுறவு அமைச்சர் சோ சோன் ஹுயியின் அழைப்புக்கு இணங்க டாக்டர் விவியன் மே 26, 27 ஆகிய தேதிகளில் அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டார்.

அனைத்துலக வர்த்தகம், பாதுகாப்பான, நிலையான கடல்வழிப் பாதைகள், விநியோகச் சங்கிலிகள் ஆகியவற்றைச் சார்ந்திருக்கும் சிங்கப்பூர், சிறிய நகரம் என்றார் டாக்டர் விவியன்.

“ஆசியான் அமைப்பிற்குள் வர்த்தகம், முதலீடுகள், தொடர்புகள் முதலியவற்றை விரிவுபடுத்துவதற்காக நாம் எந்த அளவிற்கு இணைகிறோமோ அந்த அளவிற்கு வட கிழக்காசியாவிற்கு நல்லது,” என்று அவர் வலியுறுத்தினார்.

இதற்கு முன்னர் 2018ஆம் ஆண்டில் ‘டிரம்ப்-கிம்’ உச்சநிலை மாநாட்டிற்கு முன்னதாக டாக்டர் விவியன் வடகொரியா சென்றிருந்தார்.

சிங்கப்பூரும் வடகொரியாவும் கடந்த ஆண்டு தங்களது 50 ஆண்டுகால அரசதந்திர உறவுகளைக் கொண்டாடியதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேலும் வளர்க்க அந்நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இருவரும் உறுதியளித்தனர்.

கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் வடகொரியா சாதித்துள்ளதாக டாக்டர் விவியன் குறிப்பிட்டார்.

“சிங்கப்பூரைப் பொறுத்தவரை, மற்ற நாடுகளுக்கு நம்மிடமிருந்து மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும், நாம் தகவல் தொடர்புகளைத் தொடர்ந்து பேண வேண்டும்,” என்று அமைச்சர் விவியன் தெரிவித்தார்.

ரஷ்யாவுடன் நெருங்கிய உறவில் உள்ள வடகொரியாவுக்குச் சீனா இன்றியமையாததாகத் திகழ்கிறது என்றும் அமைச்சர் விவியன் தெரிவித்தார்.

இருப்பினும், அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பானுடன் குறிப்பிடத்தக்க தொடர்பை மேற்கொள்ள வடகொரியா இன்னும் தயாராகவில்லை என அவர் குறிப்பிட்டார்.

“மற்ற நாடுகளுடன் தொடர்பு வைத்திருப்பது நல்லது என்பது எங்களது கருத்து. ஆனால் இது அவர்களால் மட்டுமே எடுக்கப்பட வேண்டிய ஒரு முடிவு,” என்றார் டாக்டர் விவியன்.

குறிப்புச் சொற்கள்
விவியன் பாலகிருஷ்ணன்வெளியுறவு அமைச்சுவடகொரியாசிங்கப்பூர்