சிங்கப்பூரில் $2.9 பில்லியனில் புதிய உற்பத்தி ஆலை

சிங்கப்பூரில் $2.9 பில்லியனில் புதிய உற்பத்தி ஆலை

2 mins read
c15cdcff-124c-47a9-a0ce-9f7cc12d5c08
மின்னிலக்க, பசுமை மாற்றங்கள் பகுதி மின்கடத்திகளை மேலும் முக்கியமானதாக்கும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் கூறினார். - படம்: சாவ்பாவ்
Google News Preferred Icon

பகுதி மின்கடத்திச் சாதனங்களை விநியோகிக்கும் ஜெர்மானிய நிறுவனம் ஒன்று, ஜூன் 12ஆம் தேதி $2.9 பில்லியனில் உற்பத்தி ஆலையை அதிகாரபூர்வமாகத் திறந்துள்ளது.

தெம்பனிசில் உள்ள 150,000 சதுர மீட்டர் பரப்பளவிலான அது, சிங்கப்பூரில் ‘சில்ட்ரொனிக்’ நிறுவனத்தின் மூன்றாவது உற்பத்தி ஆலையாகும்.

கையடக்கக் கருவிகள், மின்சார வாகனங்கள், தரவு நிலையங்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் பகுதி மின்கடத்திகளுக்கான சிலிக்கான் மென் தட்டைகளை (வேஃபர்) அந்த ஆலை தயாரிக்கிறது.

அது, இவ்வாண்டின் இறுதிக்குள் மாதத்திற்கு 100,000 மென் தட்டைகளைத் தயாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த ஆலையில் 300 ஊழியர்கள் உள்ளனர். இருப்பினும், 2028ஆம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை 600ஐ எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ‘சில்ட்ரொனிக்’ கூறியது.

ஆலையின் திறப்பு விழாவில் பேசிய துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், மின்னிலக்க, பசுமை மாற்றங்கள் பகுதி மின்கடத்திகளை மேலும் முக்கியமானதாக்கும் என்று கூறினார்.

பொருளியலை வலுப்படுத்தவும், வாழ்க்கையை மேம்படுத்தவும் பகுதி மின்கடத்திகளின் ஆற்றலை உலக நாடுகள் அங்கீகரிப்பதாக பொருளியல் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு ஹெங் கூறினார்.

பகுதி மின்கடத்திகளின் விநியோகத்தை வலுப்படுத்த, சிங்கப்பூர், உலகம் முழுதும் பங்காளிகளுடன் இணைந்து செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

“இந்தப் பங்காளித்துவங்கள் நமது பொருளியல் வளர்ச்சிக்குப் பங்களித்துள்ளன; நமது மக்களுக்கு நல்ல உயர்தரம் வாய்ந்த வேலைகளை உருவாக்கியுள்ளன,” என்று திரு ஹெங் சொன்னார்.

உலகப் பகுதி மின்கடத்தி விற்பனையின் மதிப்பு, 2023ஆம் ஆண்டில் 530 பில்லியன் அமெரிக்க டாலராக (S$716.7 பில்லியன்) இருந்தது. 2030ஆம் ஆண்டுக்குள், அது 1 டிரில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்