டெர்னேட்: இந்தோனீசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து, டுகோனோ மலை உச்சி அருகே சிக்கிக்கொண்ட மூன்று மலையேறிகளைத் தேடும் பணி மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது.
அவர்களில் இருவர் சிங்கப்பூரர்கள். மூன்றாமவர் இந்தோனீசியப் பெண்.
மலையேற்ற வீராங்கனையான அந்தப் பெண்ணின் சடலத்தை உள்ளூர் நேரம் சனிக்கிழமை பிற்பகல் 1.20 மணியளவில் கண்டுபிடித்ததாக ஸ்ட்ரெட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் அதிகாரிகள் கூறினர். தற்போதைய எரிமலை வெடிப்பு தொடர்பாக பதிவாகி உள்ள முதல் மரணம் அது. சிங்கப்பூரர்களின் கதி இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.
முன்னதாக, இரு சிங்கப்பூரர்கள் இருந்த இடத்தை கண்டுபிடித்ததாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர். இருப்பினும், எரிமலை நிலவரம் மற்றும் கடினமான நிலப்பரப்பு காரணமாக அவர்கள் இருக்கும் இடத்தை அடையமுடியவில்லை என்று அந்தக் குழுவினர் கூறியுள்ளனர்.
இருப்பினும், அவர்கள் உயிர் பிழைத்திருக்கக்கூடும் என்னும் சிறிதளவு நம்பிக்கை இருப்பதாக மீட்புப் பணியாளர்களும் உள்ளூர் மக்களும் கூறினர். எரிமலைச் சாம்பல் மூடிய டுகோனோ மலையின் சரிவுகளில் தேடுதல் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ள விவரத்தை டெர்னேட் தீவு நகரின் தேடுதல், மீட்பு அலுவலகத் தலைவர் இவான் ரம்தானி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் சனிக்கிழமை (மே 9) தெரிவித்தார்.
“மீட்புக்குழுவில் 103 பேர் இடம்பெற்றுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களை இன்றே மீட்கமுடியும் என்ற நம்பிக்கையில் உள்ளோம்,” என்றார் அவர்.
இரண்டு சிங்கப்பூரர்களும் எரிமலைக் குழம்பும் வாயும் வெளியேறும் பிரதான எரிமலைத் துவாரத்தின் விளிம்பிலிருந்து சுமார் 20 முதல் 30 மீட்டர் தொலைவில் இருந்ததாக முதற்கட்ட தகவல்களை மேற்கோள் காட்டி தேசியப் பேரிடர் தணிப்பு முகமை சனிக்கிழமை கூறியது.
மேலும், எரிமலையின் தன்மை தீவிரமடைவதற்கான சாத்தியக்கூறுகளையும் அனைத்துப் பணியாளர்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, அவர்களின் இருப்பிடத்தை அடைய கவனமான திட்டமிடலும் உத்திகளும் தேவைப்படுவதாகவும் அந்த முகமை தனது அறிக்கையில் குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
தேடுதல் பணியாளர்கள் அனைவரும் மீட்புப் பணிக்கு உதவிவரும் டுகோனோ எரிமலை கண்காணிப்பு மையத்தின் பரிந்துரைகளைப் பின்பற்றி, மிகுந்த முன்னெச்சரிக்கையுடனும் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அது கூறியது.
இந்தோனீசியாவின் வடக்கு மாலுகு மாநிலத்தில் உள்ள ஹல்மஹேரா தீவில் வெள்ளிக்கிழமை (மே 8) காலை எரிமலை வெடித்தது.
அப்போது, மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த 20 பேரில் 17 பேர் மீட்கப்பட்டதாக உள்ளூர் காவல்துறை கொம்பாஸ் தொலைக்காட்சியிடம் கூறியது. இரு சிங்கப்பூரர்கள் உள்ளிட்ட இதர மூவரும் மாண்டுவிட்டதாக தொடக்கத்தில் செய்திகள் வெளியாயின.

