சிங்கப்பூரிலிருந்து மலேசியாவிற்கு வாகனங்களைக் கடத்துவதில் உடந்தையாக இருந்ததாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் மீது மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
மலேசியரான முகமது மசுவான் பின் அப்துல்லா, 39, மீது மூன்று திருட்டுக் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. வழக்குகளில் தொடர்புடைய வாகனங்களின் மொத்த மதிப்பு $8,900.
இவர் தொடர்புடைய அக்கும்பல், வாகனங்களின் அடையாளங்கள், ஆவணங்கள் ஆகியவற்றை மாற்றி, சந்தையில் விற்பதாக மலேசிய ஊடகங்கள் தெரிவித்தன.
மசுவான், மற்றொரு மலேசியரான அப்துல்லா அப்பாஸ் முகமது அர்பா ஆய், 30, சிங்கப்பூரரான டெர்ரி டோ ஹுவாட், 53, ஆகியோருடன் இணைந்து பணியாற்றியிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடந்த குற்றச் செயல்களுக்காக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
மசுவான் திங்கட்கிழமை (மார்ச் 23), சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
கடந்த ஆண்டு நவம்பர் 22, 23ஆம் தேதி வாக்கில், சுங்கை காடுட் பகுதியிலிருந்து பதிவு நீக்கம் செய்யப்பட்ட வாகனம் ஒன்றை மசுவான் திருடியதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.
இந்தத் திருட்டானது, மலேசியாவின் பல மாநிலங்களில் இயங்கி வந்த ஒரு மிகப் பெரிய வாகனத் திருட்டு, வாகனப் பதிவு விவரத் திருட்டுக் கும்பலின் நடவடிக்கைகளில் ஒரு பகுதி என்று நம்பப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
கிட்டத்தட்ட ஐந்து மாத உளவுத் தகவல் சேகரிப்புக்குப் பிறகு மலேசியாவின் ‘புக்கிட் அமான்’ குற்றப் புலனாய்வுத் துறை அமலாக்க நடவடிக்கையை மேற்கொண்டது.
மார்ச் 12ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடத்தப்பட்ட அமலாக்க நடவடிக்கையில் 33 முதல் 60 வயதுக்குட்பட்ட ஆண்கள் 10 பேரும் பெண்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
திருட்டுப்போன 12 வாகனங்கள் மலேசியாவில் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மொத்த மதிப்பு கிட்டத்தட்ட 1.1 மில்லியன் ரிங்கிட். அவற்றில் நான்கு வாகனங்கள் சிங்கப்பூரில் திருடப்பட்டதாக நம்பப்படுகிறது.
கூடுதல் விசாரணைகள், எல்லை தாண்டிய நடவடிக்கைகளுக்கு வகைசெய்வதற்காக மலேசியக் காவல்துறை, சிங்கப்பூர்க் காவல்துறையுடன் அணுக்கமாக இணைந்து செயல்படும்.
மசுவான் மீதான வழக்கு மீண்டும் மார்ச் 31ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது.

