மின்சிகரெட் பழக்கம்: மாணவர்களுக்கான ஆலோசனைச் சேவை நாடப்படுகிறது

2 mins read
7088515c-4428-4e0b-a69d-3e6a08e5edf2
150 மாணவர்களுக்கான மின்சிகரெட், புகைப்பிடித்தல் பழக்கம் கைவிடல் திட்டத்துக்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டம் ஓராண்டுக்கு நடத்தப்படும். திட்டத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க கூடுதலாக 25 மாணவர்களுக்கு தெரிவு வழங்கப்படும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மின்சிகரெட் உள்ளிட்ட புகைப்பழக்கங்களைக் கைவிட உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையில் அவர்களுக்கு ஆலோசனைச் சேவை வழங்கக்கூடியோரின் உதவியை சுகாதார மேம்பாட்டு ஆணையம் நாடுகிறது.

இதுதொடர்பான ஒப்பந்தப்புள்ளிக்கு அரசாங்கக் கொள்முதல் இணைய வாசலான GeBiz-ல் ஜூலை 23ஆம் தேதியன்று கழகம் அழைப்பு விடுத்தது.

150 மாணவர்களுக்கான மின்சிகரெட், புகைப்பழக்கத்தைக் கைவிடும் திட்டத்துக்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்திட்டம் ஓராண்டுக்கு நடத்தப்படும்.

திட்டத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க கூடுதலாக 25 மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

இந்த அறிமுகத் திட்டம் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் மீது கவனம் செலுத்தும்.

மாணவருக்கு உதவி தேவை என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அல்லது பள்ளிகள் பரிந்துரைத்தால் அவர் உடனடியாகத் திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவார்.

மாணவர்கள் நான்கு ஆலோசனை அமர்வுகளுக்குச் செல்ல வேண்டும்.

அதன் பிறகு, அவர்கள் நிலை குறித்தும் அவர்கள் மின்சிகரெட், புகைப்பழக்கத்தைக் கைவிட்டுவிட்டார்களா என்பதை அறிந்துகொள்ள மேலும் இரண்டு ஆலோசனை அமர்வுகள் நடத்தப்படும்.

இந்த ஆலோசனை அமர்வுகள் ஒரு மாதத்துக்குள் நடத்தப்படும். ஒவ்வோர் அமர்வும் குறைந்தது 20 நிமிடங்களுக்கு நீடிக்கும்.

முதல் அமர்வின்போது மாணவர்கள் கேள்விப் பட்டியலைப் பூர்த்தி செய்ய வேண்டும். இக்கேள்விப் பட்டியல் மின்சிகரெட், புகைப்பழக்கம் தொடர்பானதாக இருக்கும்.

நான்காவது அமர்வின்போது அவர்களது உடலில் மின்சிகரெட்டுகள், சிகரெட்டுகள் ஆகியவற்றில் இருக்கும் ‘நிக்கோட்டின்’ உள்ளதா என்பதை தெரிந்துகொள்ள சோதனை நடத்தப்படும்.

நான்கு ஆலோசனை அமர்வுகள் நிறைவடைந்த பிறகு, கூடுதலாக நடத்தப்படும் இரண்டு அமர்வுகள் ஐந்து வாரங்களுக்குள் நடத்தப்பட வேண்டும். ஒவ்வோர் அமர்வும் குறைந்தது ஐந்து நிமிடங்களுக்கு நீடிக்க வேண்டும்.

இறுதி அமர்வின்போது மின்சிகரெட், புகைப்பழக்கத்தை நிறுத்துவது தொடர்பான ஆய்வும் நடத்தப்படும்.

திட்டத்துக்கு உட்படும் மாணவருக்கான அனைத்து ஆலோசனை அமர்வுகளையும் ஒரே ஆலோசகர் நடத்த வேண்டும். ஆலோசகரை மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டால் அல்லது மாற்றம் தேவைப்பட்டால் மட்டுமே மாற்றலாம்.

அனைத்து ஆலோசனை அமர்வுகளும் ஒலிப்பதிவு செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்படும்.

அதே போல ‘நிக்கோட்டின்’ சோதனையும் ஆவணப்படுத்தப்படும்.

சுகாதார மேம்பாட்டுக் கழகம் அவற்றைக் கேட்கும்போது ஐந்து வேலை நாள்களுக்குள் அதனிடம் சமர்ப்பித்துவிட வேண்டும்.

ஒவ்வோர் ஆலோசனை அமர்வும் நிறைவடைந்ததும் அதுதொடர்பான தகவல் சுருக்கம் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோருக்கும் அனுப்பி வைக்கப்படும்.

மாணவர்கள் தொடர்பான விவரங்கள், ஆலோசனை அமர்வுகள் தொடர்பான விவரங்கள் மற்றும் பதிவுகள் ஆகியவை அந்தந்த பள்ளிகளிடம் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சமர்ப்பிக்கப்படும்.

மின்சிகரெட், புகைப்பழக்கத்தை கைவிடும் திட்டத்தில் மாணவர்களிடையே எந்த அளவுக்கு முன்னேற்றம் தெரிகிறது என்பது குறித்தும் எத்தனை ஆலோசனை அமர்வுகள் நிறைவடைந்துவிட்டன என்பது குறித்தும் கழகத்திடம் தெரிவிக்கப்படும்.

ஆலோசனைச் சேவை வழங்குவோரைத் தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்படும் ஒப்புந்தப்புள்ளி சமர்ப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 1.

ஆலோசனைச் சேவை செப்டம்பர் 1ஆம் தேதியிலிருந்து வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்