சிங்கப்பூருக்கு எதிராக இரண்டாம் விசாரணையைத் தொடங்கியது அமெரிக்கா

நியாயமற்ற வர்த்தக நடைமுறை குறித்த புலனாய்வு

சிங்கப்பூருக்கு எதிராக இரண்டாம் விசாரணையைத் தொடங்கியது அமெரிக்கா

2 mins read
4687e665-9498-4dde-94ab-87e092004f7e
அமெரிக்காவின் இரண்டாவது வர்த்தகப் புலனாய்வில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள 60 பொருளியல்களில் சிங்கப்பூரும் ஒன்று. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளின் தொடர்பில் தொடங்கியுள்ள இரண்டாம் விசாரணை குறித்து அதனுடன் பேசவிருப்பதாகச் சிங்கப்பூரின் வர்த்தக, தொழில் அமைச்சு வெள்ளிக்கிழமை (மார்ச் 13) தெரிவித்திருக்கிறது.

சிங்கப்பூர் உள்ளிட்ட 60 பொருளியல்கள் மீதான விசாரணையை ஆரம்பித்திருப்பதாக அதற்கு முதல்நாள் அமெரிக்க அலுவலகம் கூறியிருந்தது.

வலுக்கட்டாயமாக ஊழியர்களைப் பணிகளில் ஈடுபடுத்தித் தயாரிக்கப்பட்ட பொருள்களின் இறக்குமதி குறித்து வா‌ஷிங்டன் விசாரிக்கிறது.

சிங்கப்பூருடன் ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகளும் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளன.

ஆசியானில் சிங்கப்பூரின் பக்கத்து நாடுகளான இந்தோனீசியா, மலேசியா, தாய்லாந்து, கம்போடியா, பிலிப்பீன்ஸ், வியட்னாம் முதலியவையும் விசாரிக்கப்படும்.

இதுவரை மற்ற நாடுகளின் ஊழியர்களைக் கட்டாயப்படுத்தித் தயாரிக்கப்பட்ட பொருள்களை இறக்குமதி செய்வதற்கு எதிரான தடையை நடைமுறைப்படுத்தவோ முறையாகச் செயல்படுத்தவோ இல்லை என்ற அடிப்படையில் 60 பொருளியல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமெரிக்க அலுவலகம் தெரிவித்தது.

“மிக நீண்ட காலமாக, வலுக்கட்டாயமாகப் பணியில் ஈடுபடுத்தித் தயாரிக்கப்படும் பொருள்களின் இறக்குமதி மூலம் அத்தகைய நாடுகள் செலவைக் குறைத்துச் சாதகமான நிலையில் இருந்திருக்கக்கூடும். அவற்றுக்கு எதிராகப் போட்டியிட வேண்டிய நிலைக்கு அமெரிக்க ஊழியர்களும் நிறுவனத்தாரும் தள்ளப்பட்டுள்ளனர்,” என்று அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் வியாழக்கிழமை சொன்னார்.

அத்தகைய பொருள்களின் இறக்குமதியைத் தடுக்கச் சம்பந்தப்பட்ட நாடுகள் போதிய நடவடிக்கைகளை எடுத்துள்ளனவா என்பதை விசாரணைகள் கண்டறியும் என்றார் அவர். அத்தகைய நடைமுறைகளை அகற்றாமல் இருப்பது அமெரிக்க ஊழியர்களையும் நிறுவனத்தாரையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதையும் தெரிந்துகொள்ள முடியும் என்று திரு ஜேமிசன் சொன்னார்.

சிங்கப்பூருக்கு எதிராக அமெரிக்க அலுவலகம் தொடங்கியுள்ள இரண்டாம் விசாரணை அது. புதன்கிழமை (மார்ச் 11) சிங்கப்பூர் உட்பட 16 பொருளியல்கள் மீதான முதல் விசாரணை பற்றி அது குறிப்பிட்டிருந்தது. உற்பத்தித் துறைகள் சிலவற்றில் கட்டமைப்பு ஆற்றல்களுக்குமேல் தயாரிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றதாக அமெரிக்க அலுவலகம் கூறுகிறது.

அமெரிக்காவின் இரண்டு விசாரணை நடவடிக்கைகளும் அது புதிய வரிகளை விதிப்பதற்குத் தளமாக அமையக்கூடும் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
அமெரிக்காவர்த்தகம்விசாரணை