அமெரிக்கா US$2.3 பில்லியன் (S$2.95 பில்லியன்) மதிப்புள்ள போயிங் பி-8ஏ (P-8A) கடல்துறை சுற்றுக்காவல் விமானங்களையும் ‘டார்பிடோ’ ஏவுகணைகளையும் அவை தொடர்பான சாதனங்களையும் சிங்கப்பூருக்கு விற்க அனுமதி அளித்துள்ளது.
“இந்த உத்தேச விற்பனை சிங்கப்பூரின் தற்போதைய, வருங்காலத் தற்காப்பு அச்சுறுத்தல்களைச் சமாளிக்கும் திறனை உயர்த்தும். எதிரிகளைத் தடுக்கும் ஆற்றல் கொண்ட, நம்பகமான கடல்துறை படையைக் கொண்டிருப்பது அதனைச் சாத்தியமாக்கும்,” என்று அமெரிக்கத் தற்காப்பு, பாதுகாப்பு ஒத்துழைப்பு அமைப்பு (DSCA) தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
“அத்துடன், ஓர் உத்திபூர்வ பங்காளியின் பாதுகாப்பை மேம்படுத்துவதன் மூலம் அமெரிக்கா தனது வெளிநாட்டுக் கொள்கையையும் தேசியப் பாதுகாப்புக் குறிக்கோள்களையும் மேலும் வலுவாக்க முடியும்.
“அந்த உத்திபூர்வப் பங்காளி, ஆசியாவின் பொருளியல் முன்னேற்றத்துக்கும் அரசியல் நிலைத்தன்மைக்கும் தேவைப்படும் ஒரு முக்கியமான சக்தி,” என்றும் அது தெரிவித்துள்ளது.
தற்காப்புச் சாதனங்களை சிங்கப்பூருக்கு விற்க அமெரிக்க வெளியுறவுத் துறை அனுமதி அளித்துவிட்டது.
அதற்குத் தேவையான அறிவிப்பை அமெரிக்கத் தற்காப்பு, பாதுகாப்பு ஒத்துழைப்பு அமைப்பு அமெரிக்க நாடாளுமன்றத்தில் வெளியிட்டுவிட்டது.
இருப்பினும், விற்பனைப் பரிவர்த்தனையில் அந்த அமைப்பு இனிமேல்தான் கையெழுத்திடும்.
சிங்கப்பூரின் கடல்துறைப் பாதுகாப்புத் திறன்களைப் புதுப்பிக்க சிங்கப்பூர் ஆயுதப் படைக்கு கடல்துறை ரோந்து விமானம் தேவைப்படுவதாக தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தெரிவித்திருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
முதற்கட்டமாக, போயிங் பி-8ஏ (P-8A) கடல்துறை சுற்றுக்காவல் விமானங்களை சிங்கப்பூர் தருவிக்கும் என்றும் அத்தகைய விமானங்கள், நெரிசல் மிகுந்த கடல்துறை பாதுகாப்புச் சூழலில் சிங்கப்பூரின் விழிப்புநிலையை அதிகரிக்கும் என்றும் அவர் கூறியிருந்தார்.
அதற்கேற்ப, அமெரிக்க ராணுவத் தலைமையகத்தில் அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் பீட் ஹெக்செத்தை செப்டம்பர் 10ஆம் தேதி சந்தித்தபோது, சிங்கப்பூரின் கொள்முதல் விருப்பத்தை அவர் நேரடியாகக் கூறினார்.
இதுதொடர்பான கூடுதல் விவரங்களைப் பெற தற்காப்பு அமைச்சை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தொடர்புகொண்டுள்ளது.

