‘அரசாங்க ஊழியர்கள் அன்பளிப்புகள் பெறுவது ஏற்க முடியாதது’

2 mins read
துணைத் தலைமைச் சட்ட அதிகாரி விளக்கம்
2001771e-2e55-4079-99eb-e5736143c773
உச்ச நீதிமன்ற வளாகத்திலிருந்து புறப்படும் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மற்ற நாடுகளில் அரசியல்வாதிகள் மதிப்புமிக்க அன்பளிப்புகளைப் பெறுவது வழக்கமான நடைமுறையாக இருந்தாலும், சிங்கப்பூரில் அது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அதனால்தான் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் மீது அரசுத் தரப்பு குற்றஞ்சாட்டியது என்றும் அரசாங்கத் துணைத் தலைமைச் சட்ட அதிகாரி தாய் வெய் ஷியொங் கூறியுள்ளார்.

அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள், குற்றவியல் சட்டத்தின் பிரிவு 165ன் கீழ் குற்றச்சாட்டுகளைக் கொண்டுவந்தது குறித்து அவர் விளக்கம் அளித்தார்.

அந்தப் பிரிவின்கீழ் அரசாங்க ஊழியர்கள் தங்கள் அதிகாரபூர்வ நிலையிலிருந்து, தாங்கள் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து மதிப்புமிக்க பொருள்களைப் பெறுவதோ ஏற்றுக்கொள்வதோ குற்றமாகக் கருதப்படுகிறது.

செப்டம்பர் 24ஆம் தேதி வழக்கு விசாரணையின் முதல் நாளன்று, ஈஸ்வரன் எதிர்நோக்கிய இரண்டு ஊழல் குற்றச்சாட்டுகள் திருத்தப்பட்டு, பிரிவு 165ன் கீழ் கொண்டுவரப்பட்டன. அதனைத் தொடர்ந்து, அந்தப் பிரிவின்கீழ் அரசுத் தரப்பு நான்கு குற்றச்சாட்டுகளையும், விசாரணைக்கு இடையூறு விளைவித்ததற்காக 204ஏ(ஏ) பிரிவின்கீழ் ஒரு குற்றசாட்டையும் பதிவுசெய்தது.

அரசாங்க ஊழியர்கள் நீண்டகாலத்திற்குக் கணிசமான அளவில் அன்பளிப்புகளைப் பெறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டால், அரசாங்கத்தின் நேர்மையிலும் பாரபட்சமின்மையிலும் பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை கடுமையாகக் கீழறுக்கப்படும் என்றார் அவர்.

பிரிட்டனில் வெளியான செய்தி அறிக்கைகள்படி, அங்கு அரசியல்வாதிகள் நூறாயிரம் பவுண்ட் மதிப்பிலான அன்பளிப்புகளைப் பெற்றிருப்பதை அவர் குறிப்பிட்டார்.

பிரிட்டிஷ் பிரதமர் கீர் ஸ்டார்மர், தொழிலாளர் கட்சித் தலைவராக 100,000 பவுண்ட் மதிப்பிலான இலவச நுழைவுச் சீட்டுகளையும் அன்பளிப்புகளையும் பெற்றதைத் தெரிவித்திருந்தார்.

தற்போதைய வழக்குடன் வேறு எந்தச் சம்பவத்தையும் ஒப்பிட்டுப் பார்ப்பது எண்ணமில்லை என்று கூறிய துணைத் தலைமைச் சட்ட அதிகாரி தாய், இந்த வழக்கு அத்தகைய சம்பவங்களிலிருந்து வேறுபடுவதாகவும் தெரிவித்தார்.

“சிங்கப்பூரில் அத்தகைய அன்பளிப்புகள் பெறுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது. நமது அமைப்புமுறை வேறு. நாம் நமது அரசாங்க ஊழியர்களுக்குக் கொடுக்கும் சம்பளமும் வேறு,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்