உபியின் கார் காட்சியகம்: 2040ஆம் ஆண்டு வரை குத்தகை நீட்டிப்பு

உபியின் கார் காட்சியகம்: 2040ஆம் ஆண்டு வரை குத்தகை நீட்டிப்பு

2 mins read
சிங்கப்பூரின் ஆகப் பெரிய கார் காட்சியகம் இதுவாகும்
f8f6dcd1-5df2-47d0-a5c9-1785b5b38e39
உபி தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ஆட்டோமொபைல் மெகாமார்ட் (ஏஎம்எல்). - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரின் உபி தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ‘ஆட்டோமொபைல் மெகாமார்ட்’ (ஏஎம்எல்) கட்டடத்தின் குத்தகைக் காலம் 2040ஆம் ஆண்டிறுதி வரையில் நீட்டிக்கப்படவுள்ளது.

புதிய, பயன்படுத்தப்பட்ட கார்களுக்கென செயல்படும் அந்தக் கட்டடத்தின் தற்போதையக் குத்தகை இவ்வாண்டு ஜூன் மாதம் முடிவடைய இருந்தது.

எட்டு மாடிகளைக் கொண்ட அக் கட்டட உரிமையாளர்கள் சிங்கப்பூர் நில ஆணையத்திடம் (எஸ்எல்ஏ) மே 15ஆம் தேதி என விதிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் $68 மில்லியனுக்கான முழுத்தொகையை அவர்களின் வழக்கறிஞர்கள் மூலம் செலுத்தியதால் குத்தகை நீட்டிக்கப்பட்டது.

பயா லேபார் ஆகாயப் படை விமானத் தளத்துக்கு அருகே அமைந்துள்ள அக்கட்டடத்தில், 121 வாகனக் கட்சியகங்களும் அலுவலகங்களும் உள்ளன. பெரும்பாலும் புதிய, பயன்படுத்தப்பட்டக் கார் முகவர்களுடன் கடன் நிதி நிறுவனங்களும் அங்கு வர்த்தகம் செய்கின்றன.

குத்தகைக் கட்டணம் செலுத்தப்பட்டதால், 2026ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி முதல் 2040 ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரைக்கான புதிய ஒப்பந்தத்தை சிங்கப்பூர் நில ஆணையம் கட்டட உரிமையாளர்களுக்கு வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதற்கு முன்பாக சில நிர்வாக நடைமுறைகள் முழுமையடைய வேண்டும் எனவும் ஆணையம் தெரிவித்தது.

சிங்கப்பூரின் மிகப் பெரிய கார் காட்சியகத்தின் எதிர்காலம்

நில ஆணையத்தின் முப்பது ஆண்டுகளுக்கானக் குத்தகையுடன் 1996ஆம் ஆண்டில் உரிமையாளர்களின் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்பிறகு அந்தக் கட்டடம் 2000ஆம் ஆண்டில் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது. 2024ஆம் ஆண்டுமுதல் நில ஆணையம் உரிமையாளர்களுடன் குத்தகை நீட்டிப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்திவந்தது.

கட்டடத்தில் வாடகைக்கு இருந்த 76 நிறுவனங்களிடம் இருந்து ஒருமித்த கருத்து கிடைக்காததால், பல முறை உரிமையாளர்கள் ஆணையத்திடம் தற்காலிக நீட்டிப்பைக் கோரி பெற்றுவந்தனர்.

ஒருவழியாக குத்தகை நீட்டிக்கப்பட்டதால் அடுத்த 14 ஆண்டுகளுக்குக் கட்டடம் செயல்படுவதோடு புதிய நிறுவனங்களை வரவேற்கவும் உரிமையாளர்கள் தயாராக உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
குத்தகைவாகனம்விற்பனைநிதிகடன்நிறுவனம்