வேலை அனுமதி அட்டை விண்ணப்பங்களில் போலி பிரகடனம் செய்ததாகவும் வெளிநாட்டு ஊழியர் ஒருவரிடமிருந்து லஞ்சம் பெற்றதாகவும் கூறப்படும் வழக்கில், சிங்கப்பூரர்கள் இருவர் மீதும் ஒரு வேலை நியமன முகவை மீதும் வியாழக்கிழமை (மே 28) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவர், வேலை நியமன முகவையில் பணிபுரிந்த ஸாவ் யான்சியாவ், 43, உடற்பிடிப்பு நிலைய மேலாளர் ஹு யுபிங், 58, என்பவராவர். குற்றச்சாட்டை எதிர்நோக்கும் நிறுவனம், ‘வண்டர்ஃபுல் ஏஜென்சி’ வேலை நியமன முகவை ஆகும்.
2024 டிசம்பர் முதல் 2025 ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில், ‘வழக்கமில்லாத வளங்கள் தொழிற்பட்டியல்’ திட்டத்தின்கீழ் சமர்ப்பிக்கப்பட்ட 14 வேலை அனுமதி அட்டை விண்ணப்பங்களில், ஸாவ் போலி பிரகடனங்களைச் செய்திருப்பது மனிதவள அமைச்சின் விசாரணையில் தெரியவந்தது.
சம்பந்தப்பட்ட ஊழியர்கள், உணவு பதப்படுத்தும் ஊழியர்களாக வேலை செய்வார்கள் என்றும் அவர்களுக்கு மாதச் சம்பளமாக $2,000 வழங்கப்படும் என்றும் அந்த விண்ணப்பங்களில் பொய்யாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
“ஆனால் உண்மையில், அந்த ஊழியர்கள் உணவு பதப்படுத்தும் பணிகளில் ஈடுபடுத்தப்படாமல், உடற்பிடிப்பு நிலையங்கள், அழகு பராமரிப்பு நிலையங்கள், ‘ஸ்பா’ நிலையங்களில் பணியமர்த்தப்பட்டனர். அதோடு, விண்ணப்பத்தில் பிரகடனப்படுத்தப்பட்ட சம்பளமும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை,” என்று மனிதவள அமைச்சு குறிப்பிட்டது.
இதற்கிடையே, வெளிநாட்டு ஊழியர் ஒருவர் உடற்பிடிப்பு ஊழியராக பணியமர்த்தப்பட்டபோதும், அவர் உணவு பதப்படுத்தும் ஊழியராகப் பணிபுரிவார் என ‘வண்டர்ஃபுல்’ முகவை போலி பிரகடனம் செய்ய ஹு தூண்டியதாக அவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அந்த ஊழியருக்கு வேலை வழங்குவதற்கான நிபந்தனையாக, அவரிடமிருந்து $500 லஞ்சம் பெற்றதாகவும் ஹு மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வேலை அனுமதி அட்டை விண்ணப்பங்களில், வேலை நியமனம் தொடர்பில் போலி பிரகடனம் செய்ததாக 12 குற்றச்சாட்டுகளையும் சம்பளம் குறித்து போலி பிரகடனம் செய்ததாக இரு குற்றச்சாட்டுகளையும் வண்டர்ஃபுல் ஏஜென்சி எதிர்நோக்குகிறது.

