சிங்கப்பூரின் நிலையான அரசியல் சூழல், உறுதியான அரசாங்க நிர்வாகம், சட்டத்துறையின் கட்டமைப்பு, சிறந்த நிதிமையம் என்ற தகுதி ஆகியன, இங்கு செயல்படும் உலகளாவிய வர்த்தகர்களின் நடவடிக்கைகளுக்கு உகந்த வகையில் அமைந்து அவர்களுக்கு நன்மை அளித்துள்ளது.
இவ்வாண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்கா, இஸ்ரேல் இருநாடுகளும் ஈரானைத் தாக்கியதோடு மத்திய கிழக்கில் போர் தொடங்கியதும் எண்ணெய், திரவ எரிவாயு, எரிபொருள் ஆகிய வர்த்தகங்களில் சிங்கப்பூரில் இருந்தபடி ஈடுபட்ட பல வெளிநாட்டு வர்த்தகங்களுக்கு அவை செய்த முதலீடுகளில் பெரிய அளவில் இழப்புகள் ஏற்பட்டன.
ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பல நாடுகளுக்கு விநியோகம் செய்யப்படவேண்டிய எரிபொருள் அங்கேயே தேங்கி நின்றதால், இங்குள்ள வர்த்தகங்கள் பாதிக்கப்பட்டன.
போரின் ஆரம்பத்தில் இழப்புகளை எதிர்கொண்ட நிறுவனங்களுக்கு, எரிபொருள் உட்பட, பல உணவுப் பண்டங்கள், விளைபொருள்களின் விலை ஏற்றம் ஒரு வகையில் சாதகமாக அமைந்து தற்போது சில வர்த்தகங்கள் லாபம் ஈட்டியுள்ளதாக அவை வங்கிகளுக்கு வழங்கிய தகவல்களை மேற்கோள் காட்டி புளூம்பர்க் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
வைடொல், ட்ராஃபைகுரா, கன்வர் குழுமம் போன்ற அனைத்துலக வர்த்தக நிறுவனங்கள், சிங்கப்பூரைத் தலைமையகமாகக் கொண்டு வர்த்தகம் செய்கின்றன.
நிலையற்ற தன்மையை சாதகமாக்குதல்
போர்க்காலம் ஏற்படுத்தும் நிலையற்ற தன்மை, எரிபொருள் உட்பட, அரிசி, கோதுமை, சோளம், காப்பிக்கொட்டை, பருப்புவகைகள் போன்ற அத்தியாவசிய உணவுப் பண்டங்களின் விலையை உலக அளவில் ஏற்ற இறக்கமாக ஆக்கிவிடுகிறது. அது பல வர்த்தக நிறுவனங்களுக்கு நல்வாய்ப்பை வழங்குகின்றது.
அத்தகைய வேளையில் வர்த்தகர்கள் தடுமாறும் விலைகளைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு பொருள்களை உலகமெங்கும் விற்கவும் வாங்கவும் செய்கின்றனர். அதன்வழியாக அவர்கள் லாபம் ஈட்டுவதை உறுதி செய்து கொள்கின்றனர்.
ஏனெனில் வர்த்தகர்களே, உற்பத்தியாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே பாலமாக செயல்படுவதால் விலைகளை லாபகரமாக வைத்திருப்பதில் அவர்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றனர்.

