இனங்களுக்கிடையே பகையைத் தூண்டும் டிக்டாக் காணொளிகள்; ஆடவர்மீது குற்றச்சாட்டு

இனங்களுக்கிடையே பகையைத் தூண்டும் டிக்டாக் காணொளிகள்; ஆடவர்மீது குற்றச்சாட்டு

2 mins read
645042fb-5e8a-48c5-9fa8-d377cc34c441
ஆறு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் 59 வயது ஜே இஷாக் ராஜு. - படம்: ஷின்மின்

இனங்களுக்கிடையே பகையைத் தூண்டும் வகையிலும் தேர்தல்களில் வாக்காளர்களைக் கண்டறிந்து அரசாங்கம் தண்டிப்பதாகக் கூறும் பொய்ச் செய்திகளைக் கொண்டும் நான்கு டிக்டாக் காணொளிகளை வெளியிட்ட 59 வயது ஆடவர்மீது புதன்கிழமையன்று (மார்ச் 11) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

அந்தக் காணொளிகள் 2023 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் டிக்டாக்கில் பதிவிடப்பட்டவை என்று செவ்வாய்க்கிழமையன்று (மார்ச் 10) காவல்துறை மற்றும் பொஃப்மா அலுவலகம் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26ஆம் தேதியன்று ஜே இஷாக் ராஜு என்ற அந்த ஆடவர் தனது டிக்டாக் கணக்கில் வெளியிட்ட காணொளியில், சிங்கப்பூரில் உள்ள சீன சமூகத்துக்கும் பிற இனத்தவர்களுக்கும் இடையே பகையைத் தூண்டும் வகையில் கருத்துகளைத் தெரிவித்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“அரசாங்கம் தனது பணம் மற்றும் வளங்களைப் பயன்படுத்தி சீன இனத்தைச் சேர்ந்தவர்களை மட்டுமே தலைவர்களாக வளர்ப்பதாக அந்தக் காணொளியில் கூறப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறானது,” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 2023ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட மற்றொரு காணொளியில், அரசு அதிகாரிகளை அவதூறாகப் பேசும் வகையிலான கருத்துகளையும் ராஜு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

அதே ஆண்டில், பொய்ச் செய்திகளைக் கொண்ட மேலும் இரண்டு காணொளிகளை அவர் பதிவேற்றினார்.

அதில் ஒன்றில், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட மத்திய சேமநிதி உறுப்பினர்களில், வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் கடனைத் திருப்பிச் செலுத்த தங்கள் மத்திய சேமநிதிப் பணத்தைப் பயன்படுத்திய எவருமே தங்களின் மத்திய சேமநிதிக் கணக்கில் அடிப்படை ஓய்வூதியத் தொகை அல்லது முழு ஓய்வூதியத் தொகையை எட்டவில்லை என்று ராஜு கூறியதாகச் சொல்லப்படுகிறது.

மற்றொன்றில், வாக்காளர்களைத் தண்டிப்பதற்காக அரசாங்கம் வாக்குகளைக் கண்டறிய முடியும் என்று அவர் சொன்னதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“இந்தக் கூற்றுகள் அனைத்தும் தவறானவை,” என்று காவல்துறை மற்றும் பொஃப்மா அலுவலகம் தெரிவித்துள்ளன.

2023ஆம் ஆண்டு பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளிகள் தொடர்பாக, 2024ஆம் ஆண்டில் அந்த ஆடவருக்குக் காவல்துறை மற்றும் பொஃப்மா அலுவலகம் முறையே 24 மாத கால நிபந்தனையுடனான எச்சரிக்கைகளை வழங்கியிருந்தன. அந்தக் குறிப்பிட்ட காலத்திற்குள் அவர் எந்தவொரு குற்றச்செயலிலும் ஈடுபடக்கூடாது என்பது அந்த நிபந்தனை.

“2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26ஆம் தேதியன்று பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளிகள் மூலம் அவர் குற்றங்களைச் செய்துள்ளதால், அந்த நிபந்தனையுடனான எச்சரிக்கையை அவர் மீறியுள்ளார். எனவே, தற்போது 2023ஆம் ஆண்டு காணொளிகள் தொடர்பான குற்றங்களுக்காகவும் அவர்மீது வழக்குத் தொடரப்படுகிறது,” என்று அறிக்கை விளக்கியுள்ளது.

அந்த ஆடவர் மீது இரண்டு அவதூறு வழக்குகள், இன ரீதியாக வெவ்வேறு பிரிவினருக்கிடையே பகை உணர்வைத் தூண்ட முயன்ற ஒரு வழக்கு,பொஃப்மா சட்டத்தின்கீழ் மூன்று பொய்ச் செய்திகளைப் பரப்பிய வழக்குகள் என மொத்தம் ஆறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்