குடும்பங்களின் மின்னிலக்கப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த முயலும் டிக்டாக்

குடும்பங்களின் மின்னிலக்கப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த முயலும் டிக்டாக்

2 mins read
9e041c36-1b32-479d-8110-71c81e135cee
டிக்டாக் நிறுவனத்தின் ‘குடும்ப மின்னிலக்கக் கண்காணிப்பு வழிகாட்டி’ முயற்சியைத் தகவல், மின்னிலக்க மேம்பாட்டுத் துணை அமைச்சர் ரஹாயு மஹ்ஸாம் (நடுவில்) அறிமுகப்படுத்தினார். - படம்: டிக்டாக்
Google News Preferred Icon

மின்னிலக்கக் கருவிகளிலும் செயலிகளிலும் பயனர்களும் அவர்களது குடும்பத்தினரும் செலவிடும் நேரத்தைக் கட்டுப்படுத்த டிக்டாக் நிறுவனம் புதிய வழிகாட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது.

சிங்கப்பூருக்கென தனிச்சிறப்புடன் அறிமுகம் கண்டுள்ள ‘குடும்ப மின்னிலக்கக் கண்காணிப்பு வழிகாட்டி’ முயற்சி, இளம், பதின்ம வயதுப் பயனர்களைப் பாதுகாக்க முற்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்தது.

‘டச் சைபர் வெல்னஸ்’ அமைப்புடன் இணைந்து டிக்டாக் நிறுவனம் இம்முயற்சியில் இறங்கியுள்ளது.

திங்கட்கிழமை (மே 25) நடந்த வழிகாட்டியின் அறிமுக நிகழ்ச்சியில் தகவல், மின்னிலக்க மேம்பாட்டுத் துணை அமைச்சர் ரஹாயு மஹ்ஸாம் கலந்துகொண்டார்.

“முன்னெப்போதும் இல்லாத சவால்களை இக்காலச் சூழலில் நாம் எதிர்கொள்கிறோம்,” என்று அவர் கூறினார்.

தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு சென்ற ஆண்டு நடத்திய ஆய்வில், பத்தில் ஒன்பது பெற்றோர் மற்றும் சிறாரின் மின்னிலக்கப் பயன்பாட்டைக் குறைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டபோதும் அவற்றின் வெற்றி விகிதம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று அவர் கவலை தெரிவித்தார்.

“பல முயற்சிகளும் வளங்களும் அறிமுகப்படுத்தப்பட்டாலும் அவற்றைப் பயன்படுத்திக்கொள்வது நம் கைகளில்தான் உள்ளது,” என்றார் திருவாட்டி ரஹாயு.

வழிகாட்டியுடன் அதைப் பயன்படுத்தும் முறைகளைக் கற்பிக்கும் ‘டச் சைபர் வெல்னஸ்’ அமைப்பின் சமூகப் பயிலரங்குகளும் பயனர்களுக்கு உதவியாக இருக்குமென அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

“இந்த மின்னிலக்க உலகில் குழந்தை வளர்ப்பு கடினமாகி வருகிறது. அடுத்த தலைமுறையினர்க்குப் பாதுகாப்பான மின்னிலக்கச் சூழலை உருவாக்குவதில் பலதரப்பட்ட பங்காளிகள் ஒன்றிணைவது அவசியம்,” என்று திருவாட்டி ரஹாயு வலியுறுத்தினார்.

அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வழிகாட்டி சிறாரையும் பதின்ம வயதினரையும் ஈர்க்கும் வகையில் பற்பல வண்ணங்களுடனும் விளையாட்டு அங்கங்களுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடன் ஆழமான உரையாடல்களில் ஈடுபடவும் இந்த வழிகாட்டி உதவுமென டிக்டாக் நிறுவனம் நம்புகிறது.

பயனர் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்குவதால் தொடர்ந்து அவர்களின் தேவைகளைக் கண்டறிந்து, இத்தகைய முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபடவுள்ளதாக டிக்டாக் நிறுவனம் உறுதியளித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்