விபத்தில் சிக்கிய மூன்று மோட்டார்சைக்கிளோட்டிகள் மருத்துவமனையில்

விபத்தில் சிக்கிய மூன்று மோட்டார்சைக்கிளோட்டிகள் மருத்துவமனையில்

1 mins read
20ec20e0-0989-4861-bfaa-70cac32a3e70
மூன்று மோட்டார்சைக்கிளோட்டிகள் விபத்தில் சிக்கினர். - படம்: ஜே முருகன்/ ஃபேஸ்புக் காணொளிப் படம்
Google News Preferred Icon

புக்கிட் தீமா விரைவுச் சாலையில் (பிகேஇ) ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 24) நிகழ்ந்த விபத்தில் சிக்கிய மூன்று மோட்டார்சைக்கிளோட்டிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 27, 30 வயதுடைய இரு மோட்டார்சைக்கிளோட்டிகள், சுயநினைவுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மூன்றாமவர், சுயநினைவின்றி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு வயது 28. இதே விபத்தில் சிக்கிய 61 வயது கார் ஓட்டுநர் காவல்துறையின் விசாரணையில் உதவி வருகிறார். உட்லண்ட்ஸ் நோக்கிச் செல்லும் பிகேஇயில் நிகழ்ந்த விபத்து குறித்து காலை 7.20 மணிக்குத் தகவல் கிடைத்ததாக காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன. விபத்து நிகழ்ந்த இடத்தில் குறைந்தது இரண்டு மோட்டார்சைக்கிள்கள் சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்ததையும் இரண்டு தடங்கள் மூடப்பட்டிருந்ததையும் ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்பட்ட காணொளி ஒன்று காட்டியது. சேதமடைந்த ஒரு மோட்டார்சைக்கிள் சில மீட்டர் தொலைவில் விழுந்துகிடந்தது. அதே ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட மற்றொரு படத்தில் மோட்டார்சைக்கிளோட்டிகள் தரையில் இருந்த ஒருவரை சூழ்ந்து இருந்ததைக் காண முடிந்தது. இரு அவசர மருத்துவ வாகனங்களும் அருகில் இருந்தன. இந்த நிலையில் விபத்து நிகழ்ந்தது பற்றி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் காலை 8.20 மணிக்குத் தகவல் வெளியிட்ட சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம், பிகேஇ நெடுஞ்சாலையிலிருந்து வெளியேறும் பாதை 8ல் நான்கில் ஒரு தடம் மூடப்பட்டிருப்பதாக அறிவித்தது. இதனால் பிகேஇயில் வெளியேறும் பாதை 10ஏக்கு முன்பு போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் என்றும் அது எச்சரித்திருந்தது. பிற்பகல் 12.25 மணியளவில் அனைத்துத் தடங்களும் போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டதாக அது ஃபேஸ்புக்கில் தகவல் வெளியிட்டிருந்தது.

குறிப்புச் சொற்கள்