சிங்கப்பூரில் இனவெறுப்புக்கு இடமில்லை: அமைச்சர் சண்முகம்

2 mins read
6a5dc28c-e254-4beb-9290-5d152c8ca0e9
தாக்குதலில் நடத்தப்பட்ட இடத்தில் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். - படம்: ராய்ட்டர்ஸ்

முஸ்லிம்கள், யூதர்கள், கிறிஸ்துவர்கள், இந்துக்கள் என எந்த சமயத்தவருக்கும் சமூகத்துக்கும் எதிரான வெறுப்புப் பேச்சுக்கு இங்கு இடமில்லை என்று தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர் சண்முகம் திங்கட்கிழமை (டிசம்பர் 15) தமது ஃபேஸ்புக் பதிவில் வெளியிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கடந்த டிசம்பர் 15ஆம் தேதி போண்டாய் கடற்கரையில் யூதர்கள் குறிவைத்து தாக்கப்பட்ட சம்பவத்தைக் கொடுமையானது என்று உள்துறை அமைச்சருமான அவர் குறிப்பிட்டார்.

“யூதர்களுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் நடக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ள வேளையில் இந்தத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. அது ஏன் நடந்தது என்பதன் மூல காரணங்களை என்னால் தெரிந்துகொள்ள முடியவில்லை. ஆயினும், வெறுப்புப் பேச்சு அச்சம்பவம் நடப்பதற்கான காரணங்களில் ஒன்றாகும். அச் செயலால் வன்முறைக்கு இட்டுச் செல்லும் சூழ்நிலை உருவாக்கப்படுகிறது,” என்று திரு சண்முகம் கூறினார்.

எனவேதான் எவரையும் எதிர்த்து வெறுப்புப் பேச்சு போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சிங்கப்பூரில் அரசாங்கம் அனுமதிப்பதில்லை என்றார் அமைச்சர்.

வெறுப்பையும் வன்முறையையும் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுவது குறித்தும் உள்துறை அமைச்சருமான சண்முகம் சுட்டினார்.

“இனம், சமயம் சார்ந்த பல சம்பவங்கள் வன்முறையில் முடிந்தது வரலாற்றில் உள்ளன. வெறுப்புப் பேச்சு ஒரு குழுவினரை இழிவுப்படுத்தி, அவர்களுக்கு எதிரான வன்முறையை நியாயப்படுத்துகிறது,” என்றார் திரு சண்முகம்.

கடந்த மாதம் யூத சமூகத்தினரை சந்தித்து சிங்கப்பூரின் சட்டங்கள் எளிமையான கொள்கையின் வெளிப்பாடு என்று கூறியதை அமைச்சர் நினைவுகூர்ந்தார்.

“இனம், சமயம் அகியவற்றைக் கடந்து நியாயமான முறையில் அனைவரும் நடத்தப்பட வேண்டும். பாகுபாடு, துன்புறுத்தல் மற்றும் வன்முறைகளில் இருந்து மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அவரவர் சமயக் கோட்பாடுகளை கடைப்பிடிக்க நாம் வகை செய்யவேண்டும். பாலஸ்தீனம், இஸ்ரேல் பற்றி எவ்வித எண்ணங்கள் கொண்டிருந்தாலும் சிங்கப்பூரின் அனைத்து சமூகங்களும் மதிக்கப்பட வேண்டும்” என்று அமைச்சர் சண்முகம் தமது பதிவில் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்