ஓட்டுநர் உரிமம், காப்புறுதி இன்றி மோட்டார்சைக்கிள் ஓட்டிய பத்துப் பேர் கைது

ஓட்டுநர் உரிமம், காப்புறுதி இன்றி மோட்டார்சைக்கிள் ஓட்டிய பத்துப் பேர் கைது

1 mins read
40bcd3db-d215-4e37-b778-bfc88a90dac5
2026 மார்ச் 31ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கையின்போது 300க்கும் அதிகமான மோட்டார்சைக்கிளோட்டிகளிடம் சோதனை நடத்தப்பட்டது. - படங்கள்: சிங்கப்பூர்க் காவல்துறை
multi-img1 of 3
Google News Preferred Icon

செல்லத்தக்க ஓட்டுநர் உரிமமும் காப்புறுதியும் இல்லாமல் மோட்டார்சைக்கிள் ஓட்டிய பத்துப் பேரைப் போக்குவரத்துக் காவல்துறை கைதுசெய்தது.

கடந்த மார்ச் 31ஆம் தேதி உட்லண்ட்ஸ் வட்டாரத்தின் அட்மிரல்டி வெஸ்ட் சாலையில் போக்குவரத்துக் காவல்துறை, தேசியச் சுற்றுப்புற வாரியம், நிலப் போக்குவரத்து ஆணையம் ஆகியவை இணைந்து, விதிமீறும் மோட்டார்சைக்கிளோட்டிகளுக்கு எதிராக அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டன.

அப்போது, 300க்கும் அதிகமான மோட்டார்சைக்கிளோட்டிகள் நிறுத்தப்பட்டு, அவர்களிடம் சோதனை நடத்தப்பட்டதாக வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 10) சிங்கப்பூர்க் காவல்துறை தெரிவித்தது.

அப்போது, செல்லத்தக்க ஓட்டுநர் உரிமமும் வாகனக் காப்புறுதியும் வைத்திருக்காமல் பத்துப் பேர் மோட்டார்சைக்கிள் ஓட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. 24 முதல் 61 வயதிற்குட்பட்ட அவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

மிகையான புகையையும் சத்தத்தையும் வெளியிட்டதற்காக 44 பேருக்குச் சுற்றுப்புற வாரியம் அழைப்பாணை வழங்கியது.

அதுபோல, முறையற்ற உரிமப் பலகை, காலாவதியான சாலை வரி, அலங்கார விளக்குகள் போன்ற குற்றங்களுக்காக நிலப் போக்குவரத்து ஆணையம் 40 பேருக்கு அழைப்பாணை வழங்கியது.

வெளிநாட்டில் பதிவுசெய்யப்பட்ட வாகனத்தை ஓட்டுவோர் உட்பட சிங்கப்பூருக்குள் நுழையும் வாகன ஓட்டிகள் அனைவரும் சிங்கப்பூரின் போக்குவரத்துச் சட்டங்களுக்கும் வாகன ஒழுங்குவிதிகளுக்கும் இணங்கி நடக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

விதிமீறுவோர்க்கு அபராதமும் வெளிநாட்டு வாகனங்களுக்கு சிங்கப்பூருக்குள் நுழையத் தடையும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்போக்குவரத்துகாவல்துறைமோட்டார்சைக்கிள்ஓட்டுநர் உரிமம்காப்புறுதி