சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ, மலேசியாவின் முன்னாள் பிரதமர் ஹுசேன் ஓன் ஆகியோரின் ஆரம்பக் கல்வியை வடிவமைத்த தெலுக் குராவ் தொடக்கப்பள்ளி இவ்வாண்டு தனது 100வது ஆண்டுநிறைவைக் கொண்டாடுகிறது.
வரலாற்றுச் சிறப்புமிக்க இப்பள்ளியின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் வியாழக்கிழமை (மே 28) பள்ளி வளாகத்தில் களைகட்டின.
‘ஒரே குரல், ஒரே இதயத்துடிப்பு’ என்ற கருப்பொருளில் அரங்கேறிய இந்த விழாவில் அதிபர் தர்மன் சண்முகரத்னம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
எதிர்காலத்தில் தொழில்நுட்பம் வேலைவாய்ப்புகளையும் பொருளியலையும் பெருமளவில் மாற்றியமைக்கலாம்; எனினும், மாணவர்களின் நற்பண்புகளை வளர்த்து மனிதப் பண்புகளைச் செதுக்குவதே கல்வியின் அடிப்படை நோக்கமாகத் தொடரவேண்டும் என்று அதிபர் தமது உரையில் வலியுறுத்தினார்.
“பிள்ளைகள் உயர்ந்த லட்சியங்களைக் கொண்டிருப்பதையே நாம் விரும்புவோம். அதே சமயம் பணிவுடனும் கனிவுடனும், சிரமப்படும் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மையுடனும் அவர்கள் மிளிர வேண்டும்,” என்றார் அவர்.
விழாவின் ஓர் அங்கமாக அதிபர் தர்மன் பள்ளியின் மரபுடைமைப் பாதையை (School Heritage Lane) அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார்.
கடந்த நூறு ஆண்டுகளில் இப்பள்ளி வெறும் கல்விக்கூடமாக மட்டுமல்லாமல், பல தலைமுறைகளைக் கடந்து மாணவர்களின் இரண்டாவது வீடாகத் திகழ்கிறது என்றார் பள்ளியின் முதல்வர் கிரேஸ் லியோங்.
கலாசாரம், சமூகம், கலைத்திட்டம், வளாகம் ஆகிய நான்கு தூண்களின் அடிப்படையில் பள்ளி தொடர்ந்து புதுமைகளைப் புகுத்தி வருவதாகக் குறிப்பிட்ட அவர், யூனோஸ் தொடக்கப்பள்ளியுடன் 2023ல் இணைந்த பிறகும் நட்பு என்ற அடித்தளத்தில் பள்ளி வலிமையாக இயங்கி வருவதாக அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
காலமாற்றத்திற்கு ஏற்ப பள்ளியின் கற்பித்தல் முறைகள் தொழில்நுட்பத்தின் உதவியுடன் மெருகேறியுள்ளதாக, அங்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிவரும் 46 வயது தமிழாசிரியர் ரமேஷ் ஈஸ்வரி தெரிவித்தார்.
முன்பு ஆசிரியரை மையமாகக் கொண்டிருந்த வகுப்பறைகள், தற்போது தொழில்நுட்பத் தளங்களின் துணையுடன் மாணவர்களை மையப்படுத்திய புத்தாக்கக் கற்றல் களமாக மாறியுள்ளன; இதன்வழி மாணவர்களின் சுயகற்றல் திறனும் ஊக்குவிக்கப்படுகிறது என்றார் அவர்.
சிக்கலான எதிர்காலச் சவால்களை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளத் தேவையான 21ஆம் நூற்றாண்டுத் திறன்களை மாணவர்களுக்கு வழங்கி, அவர்களைச் சிறப்பாகத் தயார்படுத்துவதில் பள்ளி காட்டும் முனைப்பையும் அவர் சுட்டிக்காட்டினார்.
பள்ளியில் நிலவும் வலுவான சமூக உணர்வு, ஆதரவான தலைமைத்துவம் ஆகியவற்றின் வழியே மாணவர்களின் வெற்றி முதன்மை இலக்காகக் கொள்ளப்படுகிறது எனத் திருவாட்டி ஈஸ்வரி பூரிப்புடன் குறிப்பிட்டார்.
நூற்றாண்டுக் கொண்டாட்டங்களில் மாணவர்கள் தங்களின் திறமைகளையும் படைப்புகளையும் அதிபருக்கு முன் காட்சிப்படுத்தினர்.
விழாவின் சிறப்பம்சமாகப் பள்ளியின் வரலாற்றுப் பயணத்தை நினைவுகூரும் வகையில் அரங்கேறிய இசை நாடகம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் சிறப்பாக உருவாக்கப்பட்ட இந்த நாடகம், பள்ளியின் நெடும்பயணத்தை இசையாலும் நடனத்தாலும் கண்முன் நிறுத்தியது.
அத்துடன், ‘வேர்களில் நிலைத்து, பாதைகளை உருவாக்குவோம்’ என்ற கருப்பொருளில் அமைந்த கலைக்கண்காட்சி, மாணவர்களின் எதிர்கால நம்பிக்கைகளைச் சிறப்பாகப் பிரதிபலித்தது.
மாணவர்களின் கருத்துகளுக்குப் பள்ளி செவிசாய்ப்பதும், தங்களை நல்வழிப்படுத்துவதும் தமக்கு அப்பள்ளியில் மிகவும் பிடித்தமான அம்சங்கள் என ரோபாட்டிக்ஸ் இணைப்பாட நடவடிக்கையின் தலைவரான 11 வயது அருஷ் ஓபராய் சொன்னார்.
மேடை நிகழ்ச்சிக்காக 4 மாதங்களாகத் தயார் செய்ததாக இசை நாடகத்தில் வாய்ப்பாட்டுக் குழுவில் பங்கேற்ற ஆறாம் வகுப்பு மாணவி திவேனா சுதீர் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு மாணவரின் புரிதல் திறனுக்கு ஏற்ப ஆசிரியர்கள் கற்பிக்கும் முறை தமக்கு மிகவும் பிடித்திருப்பதாகக் கூறிய அவர், தங்களைச் சிறந்த மனிதர்களாகக் கல்வி உருவாக்குகிறது என்றார்.
100வது ஆண்டுநிறைவைக் குறிக்கும் சிறப்பு ‘கேக்’ வெட்டும் அங்கத்துடனும், மதிய விருந்துடனும் விழா நிறைவுபெற்றது.

