தெலுக் பிளாங்கா தீ விபத்து: ஒருவர் மருத்துவமனையில், 40 பேர் வெளியேற்றம்

தெலுக் பிளாங்கா தீ விபத்து: ஒருவர் மருத்துவமனையில், 40 பேர் வெளியேற்றம்

1 mins read
ed751cc9-89c1-403e-8e9d-9e3c1f941e9d
56 தெலுக் பிளாங்கா ஹைட்சில் தீ விபத்து நிகழ்ந்தது குறித்து மே 24 இரவு 7 மணியளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் கிடைத்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தெலுக் பிளாங்காவில் உள்ள ஒரு வீவக வீட்டில் தீ மூண்டதில் 40க்கும் மேற்பட்டோர் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

56 தெலுக் பிளாங்கா ஹைட்சில் நிகழ்ந்த விபத்து குறித்து சனிக்கிழமை (மே 24) இரவு 7 மணியளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பாளர்கள், அங்கு ஒன்பதாவது மாடியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து கரும்புகை வெளியேறுவதைக் கவனித்தனர்.

வீட்டின் கதவை உடைத்து அவர்கள் நுழைந்தனர்.

வரவேற்பு அறையில் இருந்த படுக்கை விரிப்பில் தீ மூண்டிருந்தது. தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயணைப்பாளர்கள் தீயை அணைத்தனர்.

தீக்காயம் அடைந்த ஒருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஏறக்குறைய 48 குடியிருப்பாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டனர்.

தஞ்சோங் பகார் குழுத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான ரேச்சல் ஓங், பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களைச் சந்தித்து நலம் விசாரித்ததாகவும் குடும்பத்தினர் நலமாக இருப்பதை எண்ணி மகிழ்ச்சி அடைந்ததாகவும் மே 24ஆம் தேதி வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியிருந்தார்.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்