கதை சொல்லும் கலைவழி தமிழ் பயிற்றுவிப்பு

கதை சொல்லும் கலைவழி தமிழ் பயிற்றுவிப்பு

2 mins read
c7ff19e7-7fb4-4f3d-85c8-025357b4279b
கைப்பாவைக் கலைவழி கதை சொல்லும் உத்தியைக் கற்றுக்கொண்ட பாலர் பள்ளி ஆசிரியர்கள். - படம்: அனுஷா செல்வமணி
multi-img1 of 2
Google News Preferred Icon

சிறு வயதிலேயே குழந்தைகளின் மனத்தில் தாய்மொழி மீதான காதலை விதைக்க கதை சொல்லுதல் ஒரு மிகச் சிறந்த கருவியாகும்.

இதனைக் கருத்தில்கொண்டு பாலர் பள்ளி மாணவர்களிடையே தமிழ்மொழி கற்றலை ஊக்குவிக்கும் வகையில் ஆசிரியர்களுக்குக் கதை சொல்லும் கலையை ஒரு பயிற்றுவிப்பு முறையாகக் கற்பிக்கும் பயிலரங்கு நடைபெற்றது.

வெறும் எழுத்துகளாகவும் சொற்களாகவும் இல்லாமல் கற்பனை வளத்தோடு தமிழைக் குழந்தைகளிடம் எப்படி சுவாரசியமாகக் கொண்டுசேர்ப்பது என்பதற்கான புதிய பாதைகளை இந்த முன்னெடுப்பு காட்டியது.

மொழி கற்றலின்போது பிள்ளைகளின் மனநலத்தைப் பேணுவதன் அவசியத்தை அறிந்துகொள்ளுதல், கதைசொல்லும் உத்திகள் சிலவற்றைத் தெரிந்துகொள்ளுதல் ஆகியவை பயிலரங்கில் பகிரப்பட்டன.

தமிழ் வளர்ச்சிக் குழுவின் ஏற்பாட்டில் சனிக்கிழமை (மே 23) உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் பாலர் பள்ளி தமிழ் ஆசிரியர்களுக்கான பயிலரங்கு நடைபெற்றது. அதில் வெவ்வேறு பாலர் பள்ளிகளைச் சேர்ந்த தமிழ் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

மகிழ்ச்சியாகத் தமிழ் கற்பதைச் சாத்தியமாக்க தமிழ் வகுப்புகளில் உளவியல் பாதுகாப்பை உருவாக்குவதன் முக்கியத்துவத்திலும் பயிலரங்கு கவனம் செலுத்தியது.

முன்னாள் கல்வியாளரும் ஆலோசனை உளவியலாளருமான திருவாட்டி மலர் பாலையன், குழந்தைகள் தமிழோடு இணையும் வழிகள் குறித்துப் பேசினார்.

தவறு செய்தாலும் தன்னை யாரும் கேலி செய்யமாட்டார்கள் என்று ஒரு குழந்தை உணரும் சூழலே உளவியல் பாதுகாப்பு என்றார் திருவாட்டி மலர்.

“ஒரு குழந்தை கற்றுக்கொள்ளாமல் இருப்பதற்குக் காரணம், அதன் மூளை வேலை செய்யவில்லை என்பதன்று. அச்சமே அதற்குக் காரணம். ஒரு குழந்தைக்கு வகுப்பில் உளவியல் பாதுகாப்பு இல்லையென்றால் அதன் மனம் இரு வேலைகளைச் செய்யும்,” என்று திருவாட்டி மலர் குறிப்பிட்டார்.

கதை சொல்லுதலும் குழந்தையின் மனநலமும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவை. ஆசிரியர் கதை சொல்லும்போது அது வெறும் சொற்களாக அமைந்துவிடாது, ஒரு பாதுகாப்பான சூழலையும் உருவாக்குகிறது.

கதை கேட்கும்போது ஒரு குழந்தை பாதுகாப்பாக உணர்வதோடு, அதன் கற்பனைத்திறன் விரிந்து, கேட்கும் பழக்கமும் புரிந்துகொள்ளும் திறனும் அதிகரித்து, தன்னம்பிக்கை வளரும் என்று திருவாட்டி மலர் தெரிவித்தார்.

பயிலரங்கில் பங்கேற்ற ஆசிரியர்கள் உரையாடல்வழி வாசிப்பு, கைப்பாவை, ‘கமிஷிபாய்’ எனும் ஜப்பானியக் காகித அரங்கக் கதை சொல்லும் கலை ஆகியவற்றை ஆழமாக அறிந்துகொள்ள வெவ்வேறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர்.

கலைகளைப் பற்றி அறிந்துகொண்டதோடு ஆசிரியர்கள் குழு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு தங்களின் திறன்களை மேம்படுத்திக்கொண்டனர்.

ஆறு மாதங்களாகப் பாலர் பள்ளி தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்துவரும் பிரியா, 40, பயிலரங்கில் பல நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார்.

கைப்பாவைக் கலை தம்மை மிகவும் ஈர்த்ததாகக் கூறிய அவர், அந்த உத்தியை தம் மாணவர்களிடம் பயன்படுத்தி தமிழ்மொழி ஆர்வத்தை அதிகரிக்க முனையவிருப்பதாகவும் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்
பாலர் பள்ளிகுழந்தைகள்கதை