பாலர் பள்ளி ஒன்றில் 16 மாதக் குழந்தையை அடித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியருக்கு எட்டு மாத, இரண்டு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பிள்ளையின் அடையாளத்தைப் பாதுகாக்கக் குற்றத்தை எதிர்கொண்ட ஆசிரியர் எந்தப் பள்ளியைச் சேர்ந்தவர், அவரது பெயர் போன்ற விவரங்கள் நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை.
ஆசிரியருக்கு 32 வயது என்பது மட்டும் தெரிகிறது. அவர் பிள்ளையை அடித்த குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
பாலர் பள்ளியில், இரண்டு மாதத்திலிருந்து 17 மாதம் வரையிலான பிள்ளைகளை ஆசிரியர் பராமரிக்கும் பொறுப்பில் இருந்தார். கிட்டத்தட்ட 10 பிள்ளைகள் அவரது கண்காணிப்பில் விடப்பட்டன.
பிள்ளைகளுக்கு உணவு ஊட்டுவது உள்ளிட்ட பணிகளை ஆசிரியர் மேற்கொண்டார்.
2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி, 16 மாதக் குழந்தைக்கு ஆசிரியர் பால் புட்டியில் பாலூட்ட முற்பட்டார். அப்போது பாலைத் துப்பிய பிள்ளையின் வலது கையில் ஆசிரியர் அடித்துள்ளார்.
ஆசிரியர் அந்தப் பிள்ளையின் கையில் ஒன்பது முறை அடித்ததாகவும் கன்னத்தை இரண்டு முறை வல்லந்தமாகத் தள்ளிவிட்டதாகவும் நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன.
அதைத் தொடர்ந்து 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி, பெயர் குறிப்பிடப்படாத ஒருவர், பாலர் பள்ளியில் பிள்ளைகள் துன்புறுத்தப்படுவதாகப் புகார் அளித்தார்.
தொடர்புடைய செய்திகள்
பாலர் பள்ளியில் உள்ள கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் சம்பந்தப்பட்ட ஆசிரியருடன் வேறோர் ஆசிரியரின் துன்புறுத்தல் சம்பவங்கள் அம்பலமாகின.
ஆசிரியர் துன்புறுத்திய மற்றொரு எட்டு மாதச் சிறுவனின் வழக்கும் தீர்ப்பின்போது கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

