சிங்கப்பூர் - இந்திய உறவுகளை மேலும் வலுப்படுத்த பேச்சுவார்த்தை

சிங்கப்பூர் - இந்திய உறவுகளை மேலும் வலுப்படுத்த பேச்சுவார்த்தை

2 mins read
e2102a42-1560-4048-869a-9467784ab861
சிங்கப்பூரில் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிரு‌ஷ்ணனைச் (வலது) சந்தித்தார் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத். - படம்: யோகி ஆதித்யநாத் / ஃபேஸ்புக்

முழுமையான உத்திபூர்வ பங்காளித்துவத்தின்கீழ் சிங்கப்பூருக்கும் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்துக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிரு‌ஷ்ணனுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர்-இந்திய தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் கலந்து பேசியதாக சிங்கப்பூருக்கு திங்கட்கிழமை (பிப்ரவரி 23) இரண்டு நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்ட அவர், ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் வளர்ந்துவரும் உள்கட்டமைப்பு, வேலை வாய்ப்புக் கட்டமைப்பு ஆகியவற்றுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் தொழில்நுட்ப மற்றும் தொழில்முறைக் கல்வி, விமானத் துறைத் திறன்கள் போன்றவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்த சிங்கப்பூரில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

திரு யோகி ஆதித்யநாத்தின் முன்னிலையில் ஐடிஇ காலேஜ் சென்ட்ரல் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் அந்த இணக்கக் குறிப்புகள் திங்கட்கிழமை (பிப்ரவரி 23) கையெழுத்தானதாக அவர் ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார். கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை முன்னெடுத்துச் சென்று சம்பந்தப்பட்ட திட்டங்களை விரைவில் செயல்படுத்த உத்தரப் பிரதேசம் முனையும் என்றும் அவர் உறுதியளித்திருந்தார்.

தொழில்நுட்ப, வேலைப் பயிற்சிக் கல்வியில் ஒத்துழைப்பது போன்றவை குறித்து ஐடிஇ கல்விச் சேவைகளுடன் (ஐடிஇஇஎஸ்) விரிவான பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் திரு யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட சிறுநகரம் (integrated township), தளவாடப் பூங்கா போன்றவற்றை அமைத்து கணிசமான அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதுடன் அந்த மாநிலத்தின் உள்கட்டமைப்புச் செயல்பாட்டை வலுப்படுத்த வகைசெய்யும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் திரு யோகி ஆதித்யநாத் முன்னிலையில் கையெழுத்தாயின. யுனிவர்சல் சக்செஸ் என்டர்பிரைசஸ் லிமிடெட் (யுஎஸ்இஎல்) நிறுவனரும் தலைவருமான பிரசூன் முகர்ஜியைச் சந்தித்தபோது ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

உத்தரப் பிரதேசத்தில் தரவு நிலையங்கள், தளவாட மையங்கள், தொழில்துறைக் கட்டமைப்பு உள்ளிட்டவற்றில் அரசுத் தரப்பு முதலீடு (sovereign investment) செய்வது குறித்து சிங்கப்பூரின் முன்னாள் துணைப் பிரதமரும் தற்போதைய தெமாசெக் தலைவர் டியோ சீ ‌ஹியென் மற்றும் அவரின் குழுவினரைச் சந்தித்துக் கலந்துபேசியதாகவும் திரு யோகி ஆதித்யநாத் ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

ஜிஐசி தலைமை நிர்வாக அதிகாரி லிம் சோவ் கியாட், டிபிஎஸ் குழுமத் தலைமை நிர்வாக அதிகாரி டான் சு ‌ஷான், குளோபல் ஸ்டேட் கேப்பிட்டல் பிரைவேட் லிமிடெட் தலைவரும் நிர்வாக இயக்குநருமான சுமித் நந்தா ஆகியோரையும் திரு யோகி ஆதித்யநாத் சந்தித்தார்.

குறிப்புச் சொற்கள்