பாதசாரிகள் கடக்கும் இடங்களில் உள்ள தொடு உணர்வு தரைக்கற்கள் மாற்றப்படும்

பாதசாரிகள் கடக்கும் இடங்களில் உள்ள தொடு உணர்வு தரைக்கற்கள் மாற்றப்படும்

2 mins read
அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்தப் பணி நிறைவுபெறும்
37bcb8a7-2da9-4d8c-bede-d99e7beb2316
பார்வைக் குறைபாடுள்ள பாதசாரிகளுக்கு வழிகாட்டுவதற்காக, 2010ஆம் ஆண்டு முதல் பாதசாரிகள் கடக்கும் இடங்களில் தொடு உணர்வு நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூர் முழுவதும் உள்ள பாதசாரிகள் கடக்கும் இடங்களில் உள்ள தொடு உணர்வு நடைபாதை தரைக்கற்கள், அடுத்த நான்கு ஆண்டுகளில், நீண்ட நாள் உழைக்கும், வழுக்கி விழுவதைத் தடுக்கும் திறன் கொண்ட புதிய தரைக்கற்களால் மாற்றப்படும். இதன் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளித்த நிலப் போக்குவரத்து ஆணையம், தீவு முழுவதும் அவற்றை மேம்படுத்தும் பணிகள் கட்டங்கட்டமாக மேற்கொள்ளப்படும் என்றும் 2030ஆம் ஆண்டுக்குள் அவை நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறியது. தாம்சன் ரோட்டில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் விமானப் பணிப்பெண் ஒருவர் வழுக்கி விழுந்த இடத்தில் உள்ள தொடு உணர்வு தரைக்கற்கள், 2025 ஜூன் மாதத்தில் மாற்றப்பட்டதாக ஆணையம் மேலும் கூறியது.

"அந்த இடத்தில் உள்ள தரைக்கற்களை ஆணையம் ஆய்வு செய்துள்ளது. அவை சேதமடையவில்லை," என்று அது தெரிவித்தது. ஜூன் 22ஆம் தேதியன்று, 40 வயதான திருவாட்டி வெனிசியா இங், சாலையைக் கடக்கும்போது மஞ்சள் நிற தரைக்கற்கள் உடைய நடைபாதையில் வழுக்கி விழுந்தார். சிறிதளவு மழைக்குப் பிறகு தரை ஈரமாக இருந்ததால், அவரது கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. ஜூன் 30ஆம் தேதி அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அவர் குணமடைந்து வருவதாகத் தோன்றியது. ஆனால் பின்னர் மூச்சுத்திணறல் இருப்பதாகப் புகார் அளித்தார். மருத்துவமனையில் அவர் மயங்கி விழுந்தார். அதன் பிறகு அவருக்கு சுயநினைவு திரும்பவில்லை. விபத்து நடந்த சுமார் இரண்டு வாரங்களுக்குப் பிறகு, ஜூலை 9ஆம் தேதி அவர் உயிரிழந்தார்.

திருவாட்டி இங், விமான நிறுவனப் பணியிலிருந்து விலகிய பிறகு, சுகாதாரத் துறையில் தமது வாழ்க்கைத்தொழிலைத் தொடர்வதற்காக கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் தாம்சன் மருத்துவ மையத்தில் சேர்ந்தார். மருத்துவமனைக் கட்டடத்திற்குச் செல்வதற்காக அவர் சாலையைக் கடக்கும்போது, ​​அங்குள்ள தொடு உணர்வு நடைபாதையில் வழுக்கி விழுந்தார். பார்வையற்ற பாதசாரிகளுக்கு வழிகாட்டுவதற்காக, 2010ஆம் ஆண்டு முதல் பாதசாரிகள் கடக்கும் இடங்களில் தொடு உணர்வு நடைபாதைகள் நிறுவப்பட்டதாக ஆணையம் கூறியது. இந்தத் தரைக்கற்கள், தரை ஈரமாக இருக்கும் சமயம் உட்பட, வழுக்கலைத் தடுப்பதற்கான அனைத்துலக தரநிலைகளுக்கு ஏற்ப உள்ளன.

2024ஆம் ஆண்டில் ஊடகங்களுக்கு எழுதிய கடிதத்தில், சிங்கப்பூர் பார்வையற்றோர் சங்கம் மற்றும் பார்வையற்றோருக்கான வழிகாட்டி நாய்கள் சங்கம் உள்ளிட்ட சமூக சேவை நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து, அதே ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் திருத்தப்பட்ட தொடு உணர்வு தரைக்கற்கள் திட்டத்தைச் செயல்படுத்தப் போவதாக ஆணையம் தெரிவித்திருந்தது. இந்த புதிய அமைப்பில், ஈரமான பருவநிலையில் வழுக்கி விழும் அபாயத்தைக் குறைப்பதற்காக தொடு உணர்வு தரைக்கற்களுக்கு இடையே 300 மிமீ இடைவெளி இடம்பெற்றிருந்தது. அதே சமயம், இது பார்வையற்ற பாதசாரிகளுக்குப் போதுமான வழிகாட்டுதலையும் தொடர்ந்து வழங்கியது.

குறிப்புச் சொற்கள்
நிலப் போக்குவரத்து ஆணையம்பணிப்பெண்ஆணையம்