தாம்சன் கிரீன் கட்டுமானத் தளத்தில் சராசரிக்கும் அதிகமான விதிமீறல்கள்

மனிதவள அமைச்சின் அதிரடிச் சோதனை

தாம்சன் கிரீன் கட்டுமானத் தளத்தில் சராசரிக்கும் அதிகமான விதிமீறல்கள்

2 mins read
5146655d-896d-4ca5-9b49-13a800c0edb8
தாம்சன் கிரீன் வட்டாரத்தில் அமைந்துள்ள மூன்று தளங்களைக் கொண்ட தரை வீட்டுக் கட்டுமானத் தளத்தில் சராசரிக்கும் அதிகமான விதிமீறல்கள் கண்டறியப்பட்டன. - படம்: பே. கார்த்திகேயன்

தாம்சன் கிரீன் வட்டாரத்தில் அமைந்துள்ள மூன்று தளங்களைக் கொண்ட தரை வீட்டுக் கட்டுமானத் தளத்தில் மனிதவள அமைச்சு அதிரடிப் பாதுகாப்புச் சோதனையை நடத்தியுள்ளது.

வெள்ளிக்கிழமை (மே 29) நடத்தப்பட்ட வேலையிடச் சோதனையில் சராசரிக்கும் அதிகமான விதிமீறல்கள் கண்டறியப்பட்டன.

அதன் விளைவாக, அந்த வேலையிடத்தை நிர்வகிக்கும் ‘கிராஃப்ட்ஸ்மேன்ஷிப்’ நிறுவனத்திற்கு வேலை நிறுத்த உத்தரவும் அபராதமும் விதிக்கப்படக்கூடும் என்று அமைச்சு தெரிவித்தது.

கடந்த மூன்று ஆண்டுகளில் அந்நிறுவனத்திற்கு மூன்று முறை விதிமீறல் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.

காலை பத்து மணி அளவில் தொடங்கிய சோதனை ஏறக்குறைய ஒரு மணி நேரம் நீடித்தது.

அதிகாரிகள் சோதனையிடுவதற்காக வேலையிடத்திற்குள் செல்வதற்கு முன்பு, நிழற்படக் கருவி பொருத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி ஒன்று வேலையிடத்தின் சூழலை ஆய்வு செய்தது.

ஆளில்லா வானூர்திவழி வேலையிடத்தின் முதற்கட்டச் சோதனை நடத்தப்பட்டது.
ஆளில்லா வானூர்திவழி வேலையிடத்தின் முதற்கட்டச் சோதனை நடத்தப்பட்டது. - படம்: பே. கார்த்திகேயன்

அதன் பின்னர், அதிகாரிகள் வேலையிடத்திற்குள் சென்று ஆராயத் தொடங்கினர்.

உயரத்தில் உள்ள சாரக்கட்டுகளின்மீது இரும்புக் கம்பிகள் வைக்கப்பட்டிருந்தது, குறுக்குக் கம்பிகள் முறையாகப் பொருத்தப்படாமல் சிறு கம்பிகளைக் கொண்டு கட்டப்பட்டிருந்தது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

மேலும், ரம்பம் ஒன்று பாதுகாப்பற்ற இடத்தில் வைக்கப்பட்டிருந்தது. கட்டட அமைப்புகளில் பல ஆணிகள் அகற்றப்படாமல் இருந்தன.

கட்டட அமைப்புகளில் ஆணிகள் பல அகற்றப்படவில்லை.
கட்டட அமைப்புகளில் ஆணிகள் பல அகற்றப்படவில்லை. - படம்: பே. கார்த்திகேயன்

இவை அனைத்திற்கும் மேலாக, வீட்டின் மின்தூக்கிக்கான பள்ளத்தில் விழக்கூடிய ஆபத்து அதிகம் இருந்தபோதும் தடுப்புகள் பொருத்தப்படவில்லை.

மின்தூக்கிக்கான பள்ளத்தில் விழக்கூடிய ஆபத்து இருந்தபோதும் தடுப்பு ஏதும் பொருத்தப்படவில்லை.
மின்தூக்கிக்கான பள்ளத்தில் விழக்கூடிய ஆபத்து இருந்தபோதும் தடுப்பு ஏதும் பொருத்தப்படவில்லை. -

அதனால் அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் தடுக்கி விழக்கூடிய ஆபத்து அதிகமிருப்பதாக அமைச்சு குறிப்பிட்டது.

இம்மாதத்தில் மட்டும் கட்டுமானத் துறையில் இரண்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதனால் தற்போது அமைச்சு அத்தகைய சோதனைகளை அதிகரித்துவருவதாகக் கூறினார் தொழில் பாதுகாப்பு, சுகாதார ஆய்வக இயக்குநர், அவுட்ரீனா சுவா.

“சென்ற ஆண்டு வேலையிடப் பாதுகாப்பு சிறப்பாக இருந்தது. ஆனால், இவ்வாண்டு இத்தகைய விதிமீறல்கள் நடப்பது வருத்தமளிக்கிறது,” என்று அவர் கூறினார்.

“கட்டுமானத் துறையில் சிறிய வேலையிடங்களில்தான் அதிகச் சம்பவங்கள் நடக்கின்றன. சென்ற ஆண்டு 60 விழுக்காடு அபாயகரமான சம்பவங்கள் அத்தகைய வேலையிடங்களில்தான் நடந்தன,” என்று சுட்டினார் திருவாட்டி அவுட்ரீனா.

ஆகையால் சிறு கட்டுமான வேலையிடங்களில் அத்தகைய சோதனைகள் தொடருமென அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
கட்டுமானம்சோதனைபாதுகாப்பு