பரம்பரை மார்பக, சினைப்பை புற்றுநோய் அபாயம் உடையோர்க்கு மானியத்துடன் கூடிய மரபணுப் பரிசோதனை

பரம்பரை மார்பக, சினைப்பை புற்றுநோய் அபாயம் உடையோர்க்கு மானியத்துடன் கூடிய மரபணுப் பரிசோதனை

1 mins read
83339cf7-0dbb-4e61-b114-3fd61ee9af0e
பரம்பரை மார்பக, சினைப்பை புற்றுநோய் அபாயமுள்ளவர்களுக்கு மானிய விலையில் மரபணுப் பரிசோதனை. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

2026 டிசம்பரிலிருந்து பரம்பரை மார்பக, சினைப்பை புற்றுநோய் ஏற்படும் அபாயம் உடைய பெண்கள், மானியத்துடன் கூடிய மரபணுப் பரிசோதனை செய்துகொள்ளலாம் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.

பரிசோதனைக்கு முன்னும் பின்னும் அவர்கள் மரபணு ஆலோசனையைப் பெறுவார்கள்.

மார்பக, சினைப்பை புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பது மரபணுப் பரிசோதனையில் கண்டறியப்பட்டால், அவர்களின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கும் இப்பரிசோதனை வழங்கப்படும்.

நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (மார்ச் 5) இடம்பெற்ற சுகாதார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் பேசிய திரு ஓங், ஆண்டுதோறும் 2,000க்கும் மேற்பட்டோர் இப்பரிசோதனைக்குத் தகுதிபெறுவர் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கூறினார்.

மரபணு மாற்றம் இருப்பதாகக் கண்டறியப்படுபவர்களுக்கு அடிக்கடி மார்பகப் பரிசோதனை செய்துகொள்ள அல்லது மருந்து எடுத்துக்கொள்ள பரிந்துரைப்பது போன்ற வருமுன் காக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மருத்துவருடன் கலந்தாலோசித்து தங்களுக்குப் பொருத்தமான சிகிச்சை முறையை நோயாளிகள் முடிவு செய்வார்கள். தேவை ஏற்பட்டால், மருத்துவரின் பரிந்துரைப்படி ஒரு சிலர் அறுவை சிகிச்சையும் செய்துகொள்ளலாம்.

மேலும், 2026 பிற்பகுதியில் பரம்பரை மார்பக, சினைப்பை புற்றுநோய் அபாயத்தைக் குறைப்பதற்கான அறுவை சிகிச்சையை உள்ளடக்கும் வகையில் மெடிஷீல்டு லைஃப், மெடிசேவ் திட்டங்கள் இரண்டும் நீட்டிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்
புற்றுநோய்பரிசோதனைமரபணு