வகுப்பறைகளில் மாணவர் எண்ணிக்கை கவனத்துக்குரியது: ஆசிரியர்கள் கருத்து

2 mins read
3b212fed-b4f2-479c-86a7-a0d710c79be7
பிடோக் கிரீன் தொடக்கப்பள்ளியில் மாணவர்கள். கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் எடுக்கப்பட்ட படம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கற்பிக்கும் முறைகளில் நிகழும் மாற்றங்கள், வேலைப் பளு ஆகிய காரணங்களால் ஆசிரியர்களுக்கு மாணவர்கள்மீது அதிக கவனம் செலுத்தமுடிவதில்லை.

எனவே, வகுப்பறைகளில் மாணவர்களின் எண்ணிக்கை கட்டுப்படியான அளவில் இருப்பது நன்மை பயக்கும் என்று ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆண்டுதோறும் 1,000 ஆசிரியர்களை கல்வி அமைச்சு பணியமர்த்தும் திட்டம் வழியாக வகுப்பறைகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அடுத்த சில ஆண்டுகளில் அத்திட்டம் மேற்கொள்ளப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருந்தது.

தொடக்கப்பள்ளி, உயர்நிலை மற்றும் தொடக்கக் கல்லூரிகளில் உள்ள மாணவர்கள் எண்ணிக்கை வகுப்பறைகளில் உயர்ந்து வருவது ஆசிரியர்களுக்குச் சவாலாக உள்ளது.

ஒரு வகுப்பில் 25 முதல் 30 மாணவர்கள் என்பதை ஆசிரியர்கள் சமாளிக்க முடிந்த அளவாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதிகரித்துவரும் வேலைப் பளு, மாறுபட்ட மாணவர்களின் வெவ்வேறு தேவைகளைப் பூர்த்திசெய்தல், அதிக எண்ணிக்கையில் உள்ள மாணவர்களுக்கு தனிப்பட்ட கவனம் செலுத்தமுடியாமல் போவது ஆகியவை ஆசிரியர்கள் வெளிப்படுத்தும் காரணங்களாகும்.

கல்வி அமைச்சு ஆசிரியர்-மாணவர் ஆகியோருக்கான விகிதத்தை முறையான வகையில் வைத்திருக்கிறது. இருப்பினும் குறைந்த எண்ணிக்கையில் வகுப்பில் மாணவர்கள் இருப்பது அவர்களுடன் சிறந்த முறையில் ஆசிரியர்கள் ஈடுபாட்டுடன் கற்பிப்பதற்கு உதவும் என்று கல்வியாளர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

கடந்த 2023ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டுவரையில் தொடக்கநிலை வகுப்பறைகளில் மாணவர்களின் சராசரி எண்ணிக்கை 33.6லிருந்து 33.8 என சிறு அளவு உயர்வை எட்டியது. உயர்நிலைப் பள்ளிகளில் 32.6லிருந்து 32.9 எனவும் தொடக்கக் கல்லூரிகளில் 21.1லிருந்து 23.2 எனவும் மாணவர் எண்ணிக்கை உயர்ந்திருந்தது.

தொடக்கநிலை மாணவர்-ஆசிரியர் விகிதம் 2024ஆம் ஆண்டில் 15.6 என அதிகரித்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டில் அதே விகிதம் 14.5ஆக இருந்தது. உயர்நிலைப் பள்ளிகளின் விகிதம் அதே காலகட்டத்தில் 11.9லிருந்து 12.7க்கு ஏற்றம் கண்டது.

இந்நிலையில் ஆசிரியர்களின் எண்ணிக்கை 2023ல் 30,396லிருந்து 2024ஆம் ஆண்டில் 29,605ஆகக் குறைந்துள்ளது. அதே காலத்தில் தொடக்கநிலை மாணவர்களின் சேர்க்கை, 39,372லிருந்து 37,785ஆகக் குறைந்ததும் கவனத்துக்குரியது.

குறிப்புச் சொற்கள்