கை நிறையப் பொருள், வயிறு நிறைய உணவு, மனம் நிறைய மகிழ்ச்சி

கை நிறையப் பொருள், வயிறு நிறைய உணவு, மனம் நிறைய மகிழ்ச்சி

3 mins read
வெளிநாட்டு ஊழியர்களுக்கான ‘பிக் பாட்லக்’ நிகழ்ச்சி
781b1d18-e000-4076-82f9-18161c9999d8
அறுசுவை உணவை உண்டு மகிழ்ந்தனர் சுமார் 2,000 வெளிநாட்டு ஊழியர்கள். - படம்: ரவி சிங்காரம்
multi-img1 of 5
Google News Preferred Icon

ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 23) காலை 11 முதல் பிற்பகல் 3.30 மணி வரை ‘இட்ஸ்ரெய்னிங்ரெய்ன்கோட்ஸ்’ (ஐஆர்ஆர்) அறநிறுவனம், துவாஸ் சவுத் பொழுதுபோக்கு நிலையத்தில் சுமார் 2,000 வெளிநாட்டு ஊழியர்களுக்கான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

நிகழ்ச்சியில் அவர்களுக்குப் பல்வேறு உணவுகளையும் பொருள்களையும் அது வழங்கியது.

சோறு, கோழி இறைச்சி, கறி, நெத்திலிமீன், பனிக்கூழ், பஞ்சுமிட்டாய், பீட்சா, பலகாரங்கள் என அறுசுவை உணவோடு குடைகள், பைகள், சட்டைகள், நீர்ப்புட்டிகள், குளிர்பானங்கள் போன்ற பொருள்களும் வழங்கப்பட்டன.

சாத்தே, புரோட்டா போன்ற உணவுகள் அங்கேயே சமைக்கப்பட்டு சுடச்சுட வழங்கப்பட்டன.
சாத்தே, புரோட்டா போன்ற உணவுகள் அங்கேயே சமைக்கப்பட்டு சுடச்சுட வழங்கப்பட்டன. - படம்: ரவி சிங்காரம்

சாத்தே, பரோட்டா போன்றவை அங்கேயே சமைக்கப்பட்டு சுடச்சுட வழங்கப்பட்டன. சுவாரசியமான விளையாட்டுகளும் இடம்பெற்றன.

மூன்றாம் ஆண்டாகவும் கொவிட்-19 தொற்றுக்குப் பிறகு முதன்முறையாகவும் நடைபெற்றது ‘ஐஆர்ஆர்’ நடத்தும் ‘த பிக் பாட்லக்’ எனும் இந்நிகழ்ச்சி.

அதிர்ஷ்டக் குலுக்கலில் 80 சாம்சங் ‘டேப் ஏ’க்களையும் மாபெரும் பரிசாக ‘நொவோட்டல் ஸ்டீவன்ஸ்’ விடுதியில் இருநாள்-ஓர் இரவு தங்கும் வாய்ப்பையும் (காலைச் சிற்றுண்டியும் நூறு வெள்ளி உணவுப் பற்றுச்சீட்டும் அடங்கும்) வெளிநாட்டு ஊழியர்கள் பெற்றனர்.

“வெளிநாட்டு ஊழியர்கள் பலரும் வாரத்தின் பெரும்பாலான நாள்களில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான உணவைத்தான் உண்கிறார்கள். குறைந்த செலவில் கேட்டரிங்கை நாடவேண்டியிருப்பதால் அவர்களுக்கும் வேறு வழியில்லை.

“வெளிநாட்டு ஊழியர்கள் என்றாலே பிரியாணிதான் சாப்பிடவேண்டும் எனப் பலரும் கருதுகிறார்கள்.

“அவர்களும் நம்மைப் போன்றே மன உளைச்சலுக்கு ஆளாகும்போது ஒரு மாற்றத்திற்கு வேறுவிதமான உணவை நாடுகின்றனர். ஆனால், பீட்சா அல்லது கறி பஃப் வாங்க அவர்கள் அதிகப் பணம் செலவிட வேண்டும் அல்லவா?

“அதனால்தான் இன்று அவர்களுக்குச் சுவையான உணவைக் கொடுத்தோம்,” என்றார் ‘ஐஆர்ஆர்’ நிறுவனர் தீபா சுவாமிநாதன்.

வழக்கமாக ‘ஐஆர்ஆர்’ நிகழ்ச்சிகளுக்கு உதவும் தொண்டூழியர்களுடன் இம்முறை புதிய தொண்டூழியர்களும் பொதுமக்கள் பலரும் இணைந்துகொண்டனர். நிகழ்ச்சியில் 150 தொண்டூழியர்களும், அதன் பின்னணியில் மேலும் 150 தொண்டூழியர்களும் சேவையாற்றினர்.

பெயர்கூடத் தெரியாத தொண்டூழியர்கள் தங்களுக்கு இத்தகைய சேவையாற்றுவதைக் கண்டு, தங்கள் உழைப்பை மக்கள் அங்கீகரிப்பதை வெளிநாட்டு ஊழியர்களால் உணர முடிந்திருக்குமெனக் கருதுவதாகக் கூறினார் தீபா.

“வெளிநாட்டு ஊழியர்களில் பலரும் ஒரு நாளில் $18-20 தான் சம்பாதிக்கிறார்கள். அடிக்கடி ருசியான உணவை வாங்கப் போதுமான பணமில்லை.

“கேட்டரிங் உணவை உட்கொள்ளாமல் காலையில் சிலர் பட்டினியாக வேலை செய்கிறார்கள். சிலர் பசிக்கு உண்பார்கள். இந்நிலை எனக்கு மிகவும் கவலையளித்தது. அதனால் ‘ஐஆர்ஆர்’ மூலம் உதவிசெய்வதில் மனநிறைவடைந்தேன்,” என்றார் 2021லிருந்து ‘ஐஆர்ஆர்’ தொண்டூழியராக இருந்துவரும் வெளிநாட்டு ஊழியர் அருண் குமார்.

வெளிநாட்டு ஊழியர்களும் நம்மைப் போன்று, மன உளைச்சலுக்கு ஆளாகும்போது ஒரு மாற்றத்திற்கு வேறுவித உணவை நாடுகின்றனர்.
‘ஐஆர்ஆர்’ நிறுவனர் தீபா சுவாமிநாதன்.

வெளிநாட்டு ஊழியர்களின் சம்பளம், அவர்களது ஆசைகள், எவ்வாறு அவர்களது பொருளாதாரத்தைச் சமாளிக்கிறார்கள் என்பன குறித்த கருத்துகளையும் ‘ஐஆர்ஆர்’ தொண்டூழியர்கள் சேகரித்தனர்.

https://www.giving.sg/donate/campaign/irr-big-potluck-2024/ இணையத்தளம் மூலமும் ஆதரவாளர்கள் மூலமும் இந்நிகழ்ச்சிக்கு நன்கொடையும் பொருள்களையும் திரட்டியது ‘ஐஆர்ஆர்’.

சிங்கப்பூர் பந்தயப் பிடிப்புக் கழகம், ‘வெள்ளிக்கு வெள்ளி’ என்ற அடிப்படையில் அதற்கு ஈடான நிதியை நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளது.

இந்த நிதித் திரட்டு தொடர்ந்து இம்மாத இறுதி வரை நடைபெறும். திரட்டப்படும் கூடுதல் தொகை, எண் 470, அப்பர் பாய லேபார் சாலையில் வெளிநாட்டு ஊழியர்களுக்காக ‘ஐஆர்ஆர்’ வைத்திருக்கும் ‘இன்ஸ்பையர்’ கடைக்குப் பொருள்கள் வாங்கப் பயன்படும்.

அக்கடையில், வெளிநாட்டு ஊழியர்கள் குடைகள், காலணிகள், உடைகள் போன்ற அத்தியாவசியப் பொருள்களை இலவசமாகப் பெறலாம்.

நிகழ்ச்சியில் பங்குகொண்ட ‘ஐஆர்ஆர்’ தொண்டூழியர்கள்.
நிகழ்ச்சியில் பங்குகொண்ட ‘ஐஆர்ஆர்’ தொண்டூழியர்கள். - படம்: இட்ஸ்ரெய்னிங்ரெய்ன்கோட்ஸ்
குறிப்புச் சொற்கள்
வெளிநாட்டு ஊழியர்உணவுதொண்டூழியம்