ஆயிரக்கணக்கானோர் திரண்ட ஈகைத் திருநாள் சிறப்புத் தொழுகை

ஆயிரக்கணக்கானோர் திரண்ட ஈகைத் திருநாள் சிறப்புத் தொழுகை

3 mins read
e8432ae4-0aee-4d5c-949c-defdf5b53172
இரக்கம், தியாகம், ஒற்றுமை, சகோதரத்துவம் என பல நற்குணங்களை வலியுறுத்தும் இப்பண்டிகை அனைவருக்கும் சிறந்ததாக அமைய வந்திருந்த பலரும் வாழ்த்து தெரிவித்தனர். - படம்: சுந்தர நடராஜ்
Google News Preferred Icon

முஸ்லிம்களின் முக்கிய இரு பெருநாள்களில் ஒன்றான ஹஜ்ஜுப் பெருநாள், திங்கட்கிழமை (ஜூன் 17) அப்துல் கஃபூர் பள்ளிவாசலில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

பெருநாளையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்புத் தொழுகை அமர்வுகளில் ஏறத்தாழ 3,200 பேர் பங்கேற்றனர்.

மூன்று அமர்வுகளாகத் தொழுகை நடைபெற்றது. முதல் அமர்வு காலை 7.20 மணிக்குத் தொடங்கியது. ஆண்களுக்கென சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த அமர்வில் பள்ளிவாசலின் இரு தளங்களிலும், வெளியில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு தொழுகையில் ஈடுபட்டனர்.

நூற்றாண்டுப் பழமைமிக்க இப்பள்ளிவாசலில் இந்திய முஸ்லிம்களுடன் சீன, மலாய், இந்தோனீசிய, இலங்கை முஸ்லிம்களும் தொழுகையில் பங்கேற்றனர். பெண்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு அவர்களுக்கென ஏற்பாடு செய்யப்பட்ட அறையிலிருந்தபடி இறைவனைத் தொழுதனர். ஒருவரையொருவர் ஆரத்தழுவி, ஈகைத் திருநாள் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.

ஒருவருக்கொருவர் உதவிபுரிந்து, மனிதநேயத்தையும் சமத்துவத்தையும் கடைப்பிடித்து வாழ வேண்டும் என்பதை இப்பண்டிகை உணர்த்துவதாகக் கூறினார் பள்ளிவாசலின் இமாம் அஜீஜுல்லாஹ் ஹஸனி.

ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் சிரமமின்றி தொழுகை நடத்த உதவிபுரிந்தார் தொண்டூழியர் முகம்மது ஹனீப்,44. அனைவரையும் நெருக்கடியின்றி அமரவைப்பது, அமர்வுகளுக்கிடையே மக்கள் வந்து செல்ல வழிகாட்டுவதும் எனப் பரபரப்புடன் ஓடிக்கொண்டிருந்த அவர், தீவெங்கிலும் இருந்து வருவோர்க்கு தொழுகை சிறப்பாக அமைய உதவுவது மகிழ்ச்சி என்றார்.

தான் எப்போதும் தொழும் பள்ளிவாசலில் நண்பர்களைச் சந்தித்து வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டது மகிழ்ச்சி என்றார் முகம்மது சித்திக், 40.

கடந்த பத்தாண்டுகளாக சிங்கப்பூரில் வசிக்கும் அகமதுல்லா கான், “இந்தியாவில் கூட்டுக்குடும்பமாக இப்பெருநாளைக் கொண்டாடுவோம். தற்போது அவர்களிடமிருந்து தொலைவாக வந்துவிட்டாலும், அதனை ஈடுசெய்யும் வகையில் இப்பள்ளியில் கிடைத்த நண்பர்கள், அவர்களது குடும்பத்தினருடன் கொண்டாடுகிறேன்,” என்றார்.

தொழுகையை அமர்வுகளாகப் பிரித்து வைத்தது நல்ல ஏற்பாடு என்று சொன்னார் ஓய்வுபெற்ற மருத்துவர் முகம்மது இக்பால்.

முன்கூட்டியே வந்திருந்து, முதல் தொழுகை முடித்து வந்த நண்பர்களைச் சந்தித்து உரையாடி வாழ்த்துகளைக் கூறிவிட்டு, இரண்டாவது தொழுகைக்குச் சென்றதாகவும், அதை முடித்து மூன்றாவது அமர்வுக்கு வந்த நண்பர்களையும் சந்தித்துப் பேசியதாகவும் திரு இக்பால் கூறினார். இவ்வாறு அனைவரையும் சந்தித்தது தனது நாளை மேலும் சிறப்பாக்கியதாகவும் அவர் சொன்னார்.

இவ்வாண்டு மணமாகி, முதன்முறை மனைவியுடன் இப்பெருநாளைக் கொண்டாடும் முகம்மது கிதிர்தீன், கூடிவிட்ட பொறுப்புகளையும், கடமைகளையும் சரிவர நிறைவேற்றவேண்டும் என இறைவனிடம் வேண்டிக்கொண்டதாகச் சொன்னார்.

தம்முடைய மகனும் மருமகளும் இன்னும் பல பெருநாள்களை இதேபோல மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என நினைத்து தொழுததாகச் சொன்னார் திரு கிதிர்தீனின் தந்தையார் திரு சீனி நாகூர் கனி, 60.

தம் தந்தையுடன் வந்திருந்த, உயர்நிலை ஒன்றாம் வகுப்பு மாணவர் முகம்மது அய்மன், அங்கு தங்கள் குடும்பத்தினரையும் உறவினர்களையும் சந்தித்து உரையாட முடிந்தது நல்ல அனுபவம் என்றார்.

நண்பர்களான அன்வர் அலியும் ஷஃபீக் முகமது யூசுஃப்பும் ஏறத்தாழ 40 ஆண்டுகளாக அப்துல் கஃபூர் பள்ளிவாசலுக்கு வந்துசெல்கின்றனர். சிறுவயதில் மதரசாவில் குர்ஆன் பயின்றபோது சந்தித்த அவர்கள், இப்போது இதே பள்ளிவாசலில் தொண்டூழியம் புரிகின்றனர். இங்குள்ள பல நண்பர்களைச் சந்தித்து வாழ்த்து பரிமாறினால்தான், பண்டிகை முழுமையடைந்த உணர்வு ஏற்படுவதாக அவர்கள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்