‘பேல் கார்ப்’பின் புதிய ஆலை: 300 வேலை வாய்ப்புகள்

‘பேல் கார்ப்’பின் புதிய ஆலை: 300 வேலை வாய்ப்புகள்

2 mins read
fcb5aa8c-81e9-4ce9-bf04-97705387ca25
பேல் கார்ப் நிறுவனத்தின் புதிய ஆலை. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2
Google News Preferred Icon

உயரிய உற்பத்திப் பொருள், தொழில்நுட்ப விநியோக நிறுவனமான பேல் கார்ப்பரே‌ஷன் நிறுவனம் சிங்கப்பூரில் 150 மில்லியன் டாலர் (202 மில்லியன் வெள்ளி) மதிப்புள்ள புதிய ஆலையைத் திறந்துள்ளது.

அதன் மூலம் வரும் ஆண்டுகளில் கிட்டத்தட்ட 300 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த பேல், ரசாயனம், கனிமங்களைத் தூய்மைப்படுத்துவது, பிரிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. சிங்கப்பூரில் அமைந்துள்ள அதன் புதிய ஆலை, பகுதி மின்கடத்தி துறைக்கான உயரிய வடிகட்டிப் பொருள்களை உருவாக்கும்.

வட்டார, உலகளவிலான வாடிக்கையாளர்களின் தேவைகளை பேல் நிறுவனத்தின் சிங்கப்பூர் ஆலை பூர்த்திசெய்யும்.

“இந்தப் புதிய ஆலை உயரிய பகுதி மின்கடத்தி உற்பத்திக்கான தொழில்நுட்பம் மேம்பட்டுள்ளதை மட்டும் குறிக்காது. இது, பேல், அடுத்த அத்தியாயத்தில் அடியெடுத்து வைப்பதையும் காட்டுகிறது,” என்று டெனஹர் குழுமத்தின் நிர்வாகியான நரே‌ஷ் நரசிம்மன் கூறினார். பேல், டனஹர் குழுமத்துக்குச் சொந்தமான நிறுவனமாகும்.

புதிய ஆலை, பெனோய் தொழில்துறை வட்டாரத்தில் 2.8 ஹெக்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. அதில் 18,000 சதுர அடி பரப்பளவைக் கொண்ட பகுதியில் பெரிய அளவிலான உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஆலையில் பேலின் நுண்ணிய மின்சாரப் பொருள்களுக்கான (மைக்ரோஇலெக்டிரோனிக்ஸ்) வர்த்தகத்துக்கான தலைமை அலுவலகமும் புதிய ஆலையில் அமைந்துள்ளது.

பேல் உருவாக்கவிருக்கும் 300 வேலை வாய்ப்புகள் உயரிய உற்பத்தி, அறிவியல், பொறியியல் ஆகிய துறைகளில் அமையும். சிங்கப்பூரில் முதன்முதலில் 1984ஆம் ஆண்டில் வந்த பேல், பயிற்சி அளிப்பது, புதிய திறனாளர்களை உருவாக்குவது உள்ளிட்ட அம்சங்களில் கவனம் செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேலின் திறப்பு விழாவில் பேசிய வர்த்தக, தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான், பகுதி மின்கடத்தித் துறை சிங்கப்பூரின் உற்பத்தித் துறைக்கு முக்கியமானது என்று குறிப்பிட்டார். அண்மைய ஆண்டுகளில் பகுதி மின்கடத்தித் துறை பல பிரபல நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்வர்த்தகம்வேலை