அன்னையர்களைச் சிறப்பித்த ஃபெர்ன்வேல் சமூக நிகழ்ச்சி

அன்னையர்களைச் சிறப்பித்த ஃபெர்ன்வேல் சமூக நிகழ்ச்சி

2 mins read
1026f4ac-7acd-4f37-aadb-2a42115be570
பிரதமர் லீ சியன் லூங்குடன் புகைப்படம் எடுத்துகொண்ட திரு ஹாஜா ஜஹபர்தீன் குடும்பத்தினர். - படம்: த. கவி
multi-img1 of 3
Google News Preferred Icon

அன்னையர் தினத்தை முன்னிட்டு ஃபெர்ன்வேல் குடியிருப்புப் பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஃபெர்ன்வேல் வட்டார அன்னையர்க்கு அர்ப்பணிப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த நிகழ்ச்சியில், அங் மோ கியோ குழுத்தொகுதியின் அடித்தள அமைப்புகளுக்கான ஆலோசகர்களான பிரதமர் லீ சியன் லூங்கும், திரு கான் தியாம் போவும் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

அங் மோ கியோ குழுத்தொகுதிக்குக்கீழ் வரும் ஃபெர்ன்வேல் குடியிருப்புப் பேட்டையில் வசிக்கும் குடியிருப்பாளர்களுடன் பிரதமர் லீ கலந்துரையாடி நிகழ்ச்சியின் நடவடிக்கைகளைப் பார்வையிட்டார்.

பிரதமர் பதவியில் இருந்து விலகவிருக்கும் திரு லீயுடன் குடியிருப்பாளர்கள் பலரும் ஆவலுடன் உரையாடினர். அவருக்கு நன்றிதெரிவித்து வாழ்த்து அட்டைகளை வழங்கினர். அவருடன் குடும்பமாகப் படமெடுத்து மகிழ்ந்தனர்.

‘ஃபெர்ன்வேல் நமது வீடு. அனைவரையும் உள்ளடக்கும் ஒரு சமூகத்தை நாம் உருவாக்குவோம். இந்தக் கொண்டாட்ட நிகழ்ச்சி நம் அன்னையர்களைச் சிறப்பிக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான நாள்,” என்று திரு கான் சொன்னார்.

2,500க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் தங்களின் குடும்பங்களோடு அன்னையர் தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர். சமூக உணர்வைப் பறைசாற்றும் விதமாக குடும்பங்களுக்கும் பிள்ளைகளுக்கும் பல நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

ஃபெர்ன்வேல் குடியிருப்பாளர்களின் சிறப்பு அன்னையர் தின வாழ்த்துகள் அடங்கிய மின் படத்தொகுப்பு நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. அதை பிரதமர் லீ ஆவலுடன் கண்டு ரசித்தார்.

“முதல்முறையாக நாங்கள் இதுபோன்ற சமூக நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறோம். என் பிள்ளைகள் நிகழ்ச்சியில் இடம்பெற்ற போட்டியில் கலந்துகொண்டு பரிசு வென்றனர்,” என்று ஃபெர்ன்வேல் குடியிருப்பாளர் ஹாஜா ஜஹபர்தீன், 50, கூறினார்.

குறிப்புச் சொற்கள்