‘ஜோகூர்-சிங்கப்பூர் பொருளியல் வட்டாரத்தால் சிங்கப்பூர் நிறுவனங்கள் பயனடையும்’

‘ஜோகூர்-சிங்கப்பூர் பொருளியல் வட்டாரத்தால் சிங்கப்பூர் நிறுவனங்கள் பயனடையும்’

2 mins read
90b37c74-d42e-437f-ad9d-b99e7a8d04ca
சிறப்புப் பொருளியல் வட்டாரம், பொருள்கள் சரளமாகக் கடந்து செல்வதையும் பயணத்தை எளிமையாக்கவும் உதவும் என்று வர்த்தக, தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான் தெரிவித்தார். - படம்: லியான்ஹ சாவ்பாவ்
Google News Preferred Icon

ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் வட்டாரம் அமலுக்கு வரும்போது சிங்கப்பூரின் நிறுவனங்கள் பலனடையும் என்று மே 8ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பேசிய வர்த்தக தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான் தெரிவித்தார்.

ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் வட்டாரத்தால் பொருளியல் தொடர்புகள் அதிகரிக்கும். சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட நிறுவனங்கள் மூலம் குடியிருப்பு வட்டார வர்த்தகங்களும் பலனடையும் என்றார் அமைச்சர்.

கெபுன் பாரு நாடாளுமன்ற உறுப்பினரான ஹென்றி குவேக், செலவழிக்கும் போக்கு சிங்கப்பூரிலிருந்து ஜோகூருக்கு மாறினால் உள்ளூர் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் எப்படி பலன் அடையும் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்குப் பதிலளித்து அமைச்சர் பேசினார்.

சிங்கப்பூரும் மலேசியாவும் மேலும் விவாதிப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு சிறப்புப் பொருளியல் வட்டாரம் அமைப்பதற்கான திட்டங்கள் முறைப்படுத்தப்பட்டன.

இதன்கீழ் குடிநுழைவுச் சோதனையை விரைவுப்படுத்தும் கடவுச்சீட்டு இல்லாத கியூஆர் குறியீடு, சிங்கப்பூர் வர்த்தகங்கள் ஜோகூரில் கடைகள் அமைப்பதை எளிதாக்கும் ஜோகூரில் ஒரேயிட வர்த்தக, முதலீட்டு சேவை நிலையம் உள்ளிட்ட யோசனைகள் முன்வைக்கப்பட்டன.

நாடாளுமன்றத்தில் தொடர்ந்து பேசிய அமைச்சர் டான், சிறப்புப் பொருளியல் வட்டாரத்தின் நோக்கங்களை மறுவுறுதிப்படுத்தினார். அவற்றில் பொருள்கள் சரளமாக கடந்து செல்வது, பயணத்தை எளிமையாக்குவது ஜோகூரில் முதலீட்டு சூழலை வலுவாக்குவது போன்றவை அடங்கும்.

11வது சிங்கப்பூர்-மலேசிய தலைவர்களின் ஓய்வுத்தளச் சந்திப்பின்போது ஒப்பந்தம் ஏற்படுவதற்காக இரு தரப்பும் இணைந்து செயல்படுவதாகவும் அமைச்சர் டான் கூறினார்.

2023 அக்டோபர் மாதத்தில் முந்தைய ஓய்வுத் தளச் சந்திப்பின்போது பிரதமர் லீ சியன் லூங்கும் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிமும் வரவிருக்கும் சந்திப்பு மலேசியாவில் நடைபெறும் என்பதை ஒப்புக் கொண்டனர்.

குறிப்புச் சொற்கள்
பொருளியல்சிங்கப்பூர்ஜோகூர்