மலேசிய மாமன்னர், அரசியாருக்கு இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பு

மலேசிய மாமன்னர், அரசியாருக்கு இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பு

2 mins read
fa4ca353-3a17-40e4-849c-9f63faeef1b4
இஸ்தானாவில் (இடமிருந்து வலம்) மலேசிய அரசியார் ராஜா ஸரித் சோஃபியா, மலேசிய மாமன்னர் இப்ராகிம் இஸ்கந்தர், அதிபர் தர்மன் சண்முகரத்னம், திருவாட்டி ஜேன் இத்தோகி. - படம்: சாவ்பாவ்
Google News Preferred Icon

மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தருக்கும் அவரது துணைவியார் ராஜா ஸரித் சோஃபியாவுக்கும் மே 6ஆம் தேதியன்று இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பு வழங்கப்பட்டது.

மாமன்னர் இப்ராகிம் சிங்கப்பூருக்கு இரண்டு நாள் அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் மே 6லிருந்து மே 7ஆம் தேதி வரை சிங்கப்பூரில் இருப்பார்.

மே 6ஆம் தேதி காலை 10.45 மணிக்கு மாமன்னர் இப்ராகிமும் அவரது துணைவியாரும் இஸ்தானாவுக்குச் சென்றனர். அவர்களை அதிபர் தர்மன் சண்முகரத்னமும் அவரது துணைவியார் திருவாட்டி ஜேன் இத்தோகியும் வரவேற்றனர்.

மாமன்னர் இப்ராகிம்முடன் மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக், சிங்கப்பூருக்கான மலேசியத் தூதர் அஸ்ஃபர் முகம்மது முஸ்தஃபா, மூத்த அதிகாரிகள் ஆகியோரும் இருந்தனர்.

சடங்குபூர்வ வரவேற்புக்குப் பிறகு, சிங்கப்பூர் அமைச்சர்களை மாமன்னர் சந்தித்தார்.

மாமன்னரைச் சந்தித்த அமைச்சர்களில் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங், சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி ஆகியோர் அடங்குவர்.

மே 6ஆம் தேதி மாலையில், அதிபர் தர்மன், மலேசிய மன்னர் தம்பதிகளுக்கு இரவு விருந்து வழங்கி கௌரவித்தார்.

அதனைத் தொடர்ந்து, மாமன்னருக்குப் பிரதமர் லீ சியன் லூங் மதிய உணவு விருந்தளித்துச் சிறப்பிப்பார்.

மாமன்னர் இப்ராகிமைத் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் மே 7ஆம் தேதி சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதையடுத்து, மாமன்னர் இப்ராகிம் சிங்கப்பூர் நாடாளுமன்றத்துக்குச் சென்று நாடாளுமன்றக் கூட்டத்தை நேரில் பார்ப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.

அதே நாளன்று தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையை மாமன்னர் நேரில் சென்று காண இருக்கிறார். அத்துடன் ஜோகூர் பாரு-சிங்கப்பூர் இடையிலான ரயில் சேவைக்கான உட்லண்ட்ஸ் நார்த் முனையத்தின் கட்டுமானப் பணிகள் எந்த அளவில் உள்ளது என்பதைப் பார்க்கவும் மாமன்னர் அங்கு செல்ல இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரையும் ஜோகூர் பாருவையும் இணைக்கும் ஜோகூர் கடற்பாலம் 1924ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28ஆம் தேதியன்று திறக்கப்பட்டது.

அதன் நூற்றாண்டு விழாவுக்கு முன்னதாக மாமன்னர் சிங்கப்பூருக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
மாமன்னர்மலேசியாஅதிபர் தர்மன்பிரதமர் லீ