குறைந்தது $800,000 இழந்த பணிப்பெண்கள்

குறைந்தது $800,000 இழந்த பணிப்பெண்கள்

2 mins read
03b23e78-fd92-4c28-8528-a016520bd811
மோசடியால் பாதிக்கப்பட்ட மற்றும் நூலிழையில் தப்பிய கிட்டத்தட்ட 2,000 பணிப்பெண்கள் மற்ற பணிப்பெண்களுக்கு மோசடிக் குற்றங்கள் பற்றியும் அவற்றை எவ்வாறு தவிர்ப்பது என்பது குறித்தும் மாதம் இரு ஞாயிற்றுக்கிழமை சொல்லிக்கொடுக்கின்றனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரில் பணிபுரியும் பணிப்பெண்களில் 500 பேர் 2023ஆம் ஆண்டில் மோசடியால் பாதிக்கப்பட்டனர்.

2022ஆம் ஆண்டில் மோசடிக்காரர்கள் விரித்த வலையில் சிக்கிய 423 பணிப்பெண்களைவிட இது 18 விழுக்காடு அதிகம் என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் ஏப்ரல் 2ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாகப் பதலளித்தார்.

மோசடிக்காரர்களால் ஏமாற்றப்பட்ட பல பணிப்பெண்கள் அதுகுறித்து புகார் அளிக்காமல் இருக்கக்கூடும் என்று முகவைகளும் அரசு சார்பற்ற அமைப்புகளும் கவலை தெரிவித்துள்ளன.

விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தால் வேலையை இழக்கக்கூடும் அல்லது சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பிவைக்கப்படக்கூடும் என்ற அச்சத்தில் அவர்கள் புகார் அளிக்காமல் இருந்துவிடும் சாத்தியங்கள் இருப்பதாக அவை கூறின.

2023ஆம் ஆண்டில் மோசடிக்காரர்களிடம் பணிப்பெண்கள் குறைந்தது $800,000 இழந்ததாக காவல்துறை கூறியது.

2022ஆம் ஆண்டில் பணிப்பெண்கள் $1 மில்லியன் இழந்தனர்.

பொய் விளம்பரங்கள் மூலம் தனிப்பட்ட விவரங்கள் பெறும் மோசடிகளால் 2022, 2023ஆம் ஆண்டுகளில் அதிகப் பணிப்பெண்கள் பாதிக்கப்பட்டனர்.

2023ஆம் ஆண்டில் வேலை மோசடி, மின் வர்த்தக மோசடி ஆகியவற்றால் பல பணிப்பெண்கள் பணம் இழந்தனர்.

இசைநிகழ்ச்சி நுழைவுச்சீட்டு விற்பனை தொடர்பான மோசடியும் அவற்றில் அடங்கும்.

2021ஆம் ஆண்டில் 357 பணிப்பெண்கள் மோசடி காரணமாகப் பணம் இழந்தனர்.

இது 2020ஆம் ஆண்டில் பாதிப்படைந்த 216 பணிப்பெண்களைவிட அதிகம்.

இந்தப் பிரச்சினையை எதிர்கொள்ள பணிப்பெண்களுக்காக காவல்துறையினர் சிறப்புத் திட்டம் ஒன்றை நடத்தி வருகின்றனர்.

வீடு புகுந்து திருடுவது, அத்துமீறி நுழைவது, மோசடிக் குற்றங்கள் ஆகியவற்றைத் தவிர்ப்பது எப்படி என்பது குறித்து இத்திட்டம் மூலம் பணிப்பெண்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

மோசடிக்காரர்களிடம் பணத்தை இழந்த பணிப்பெண்களுக்கு ஆலோசனை வழங்குவது, இலவச சட்டச் சேவை வழங்குவது போன்ற உதவிகளை வழங்குவதாக வெளிநாட்டுப் பணிப்பெண்கள் சங்கம் (சமூக ஆதரவு, பயிற்சி) தெரிவித்தது.

இதற்கிடையே, மோசடிக் குற்றங்கள் குறித்து பணிப்பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பணிப்பெண்கள் நிலையம் நடவடிக்கை எடுத்துவருகிறது.

மோசடியால் பாதிக்கப்பட்ட மற்றும் நூலிழையில் தப்பிய கிட்டத்தட்ட 2,000 பணிப்பெண்கள் மற்ற பணிப்பெண்களுக்கு மோசடிக் குற்றங்கள் பற்றியும் அவற்றை எவ்வாறு தவிர்ப்பது என்பது குறித்தும் மாதம் இரு ஞாயிற்றுக்கிழமை அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கின்றனர்.

லக்கி பிளாசா கடைத்தொகுதி, ஃபார் ஈஸ்ட் பிளாசா கடைத்தொகுதி, பாய லேபார் வட்டாரம் என பணிப்பெண்கள் தங்கள் விடுப்பு நாள்களில் அதிகம் கூடும் இடங்களில் இந்த விழிப்புணர்வுத் திட்டத்தைப் பணிப்பெண்கள் அடங்கிய தொண்டூழியர் குழு நடைமுறைப்படுத்துகிறது. 

குறிப்புச் சொற்கள்
பணிப்பெண்மோசடி