தலைமைத்துவ மாற்றத்துக்குமுன் பிரதமர் லீயின் இறுதி அரசியல் உரை

தலைமைத்துவ மாற்றத்துக்குமுன் பிரதமர் லீயின் இறுதி அரசியல் உரை

2 mins read
4f55dbe7-59d1-4047-9ec9-9acf1de4bdf0
2022ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி மே தினப் பேரணியில் உரையாற்றிய பிரதமர் லீ சியன் லூங். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

திரு லீ சியன் லூங், சிங்கப்பூரின் பிரதமராகத் தமது கடைசி முக்கிய அரசியல் உரையை ஆற்றவுள்ளார்.

புதன்கிழமை (மே 1) காலை பிரதமர் லீ இவ்வாண்டின் மே தினப் பேரணியில் உரையாற்றுவார். அதற்கு இரண்டு வாரங்கள் கழித்துத் திரு லீ, பிரதமர் பொறுப்பை துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான திரு லாரன்ஸ் வோங்கிடம் ஒப்படைப்பார்.

திரு வோங், சிங்கப்பூரின் நான்காவது பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ளார். மே மாதம் 15ஆம் தேதி இஸ்தானாவில் அவரது பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும்.

இவ்வாண்டின் மே தின உரை மரினா பே சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும். அதில் பிரதமர் லீ முக்கிய உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக 2004ல் அப்போதைய பிரதமர் கோ சோக் தோங் மே தினப் பேரணியில் முக்கிய உரையாற்றினார். அதற்கு முன்பு மூன்றாண்டுகளாக அவ்வாறு செய்யாத திரு கோ, 2004 ஆகஸ்ட்டில் பிரதமர் பொறுப்பைத் திரு லீ சியன் லூங்கிடம் ஒப்படைப்பதற்கு முன்பு மீண்டும் மே தினப் பேரணியில் முக்கிய உரையாற்றினார்.

2001லிருந்து 2003ஆம் ஆண்டுவரை துணைப் பிரதமராகப் பதவி வகித்தபோது திரு லீ மே தினப் பேரணியில் உரையாற்றினார்.

2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்தான் சிங்கப்பூரின் அடுத்த பிரதமராகப் பொறுப்பு வகிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மக்கள் செயல் கட்சியின் (மசெக) நான்காம் தலைமுறைத் தலைவராகும் பொறுப்பிலிருந்து திரு ஹெங் விலகிக்கொண்டார்.

அதற்குப் பிறகு 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திரு வோங் மசெகவின் நான்காம் தலைமுறைத் தலைவராக அங்கீகரிக்கப்பட்டார். அதனால் 2023ஆம் ஆண்டின் மே தினப் பேரணியில் மட்டும்தான் திரு வோங் முக்கிய உரையாற்ற நேரிட்டது.

2022ஆம் ஆண்டு மே தினப் பேரணியில் திரு லீயே முக்கிய உரையாற்றினார்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்லீ சியன் லூங்பிரதமர்அரசியல்லாரன்ஸ் வோங்மசெக